* வெங்காய ஊத்தப்பம் செய்யும் போது தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்துவிடும்.
* கேசரி செய்யும் போது அதில் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
* வாழைக்காய் பொரியல் சமைக்கும்போது அதில் மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக்கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். வாயுத்தொல்லை ஏற்படாது.
– சுந்தரி காந்தி, சென்னை.
* எந்தவித சுண்டல் செய்து தாளிக்கையில் வழக்கமான தாளிப்புடன் தேங்காய் துருவல், வறுத்த எள், வேர்க்கடலை பொடியை தூவி இறக்க சுவையாக இருக்கும்.
* வெந்த சுண்டல் வகையுடன் கரம் மசாலா, இஞ்சி, பூண்டு மசாலா சேர்த்து கலந்து இறுதியில் சாட் மசாலா, கஸ்தூரிமேதி தூவி இறக்க வித்தியாச சுவையோடு சுண்டல் கமகமக்கும்.
* கருப்பு முழு உளுந்தை ஊறவைத்து, பின் வேகவிட்டு தாளித்து தேங்காய் துருவல் வறுத்து சாம்பார் பொடி தூவி நன்கு கலந்து இறக்க சுவையாக இருக்கும்.
* பார்லி, வேர்க்கடலை, உப்பு சேர்த்து வேகவிட்டு தாளித்து பின் வெந்ததை சேர்த்து, பச்சைமிளகாய், தேங்காய், சீரகம், பெருஞ்சீரகம் ஒன்றிரண்டாக தட்டி சேர்த்து நன்கு கிளறி இறக்க சுவை அலாதியாக இருக்கும். மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
* சாம்பார் செய்யும்போது குக்கரில் துவரம் பருப்பு வேகவைக்கும் போது, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேகவைத்தால், சாம்பார் ருசியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வெண்ணெய் காய்ச்சிய பிறகு, இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும். வாசுகி, சென்னை.
* பூரி செய்ய மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்து பூரி செய்தால் கரகரவென்று இருக்கும். சுவையும் அதிகம்.
* ப்ரவுன் கலர் கவரில் வாழைப்பழத்தை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.
* தோசை மாவுக்கு அரைக்க அரிசி, உளுந்தம் பருப்பு ஊற வைக்கும் போது கைப்பிடி அளவு துவரம் பருப்பும் சேர்த்துக் கொண்டால் தோசை வாசனையாகவும், முறுகலாகவும் இருக்கும். யமுனா, காஞ்சிபுரம்.
* கீரையை நறுக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து, கொதிக்க விட்டு மிளகு, சீரகம், தேங்காய் பூ போட்டு கிளறி இறக்கிவிட்டால் கீரை மசியல் தயார்.
* சாதம் வெள்ளை வெளேரென்றும் பொலபொலவென்றும் இருக்க வேண்டுமானால் குக்கரில் அரிசி களைந்து வைக்கும் பொழுது இரண்டு சொட்டு எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிய வேண்டும்.
* தோசைக்கல்லில் தோசை வார்க்கும்போது சில சமயம் ஒழுங்காக வராது. எலுமிச்சம் பழம், புளி, வெங்காயம், வெண்டைக்காய் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து தோசைக்கல்லில் நன்றாகத் தேய்த்து விட்டு தோசை வார்த்தால், தோசை நல்லா வரும்.
* தினசரி சமையலுக்கு உபயோகித்தது போக மீதும் இருக்கும் கறிவேப்பிலையைச் சேர்த்து வைத்துக் கொண்டு இட்லி பொடி செய்யும் போது வறுத்து அரைத்தால் மிக ருசியாக இருக்கும். ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஃபிரிட்ஜில் வையுங்கள்.
தண்ணீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே வாருங்கள். நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும், கெட்டுப் போகாமலும் இருப்பதுடன் சுவையும் கூடுதலாகி நன்றாக இருக்கும்.
* தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும் போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடு மணமாகவும் இருக்கும்.
* கீரை மசியல் செய்யும் போது சிறிது சோறு வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.கே.கவிதா, வேலூர்.
The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.