×
Saravana Stores

நடமாடும் உயிர் காவலர்!

நன்றி குங்குமம் தோழி

வயதான காலத்தில் உனக்கெதற்கு இந்த வேண்டாத வேலை என்ற வசனத்தை அக்கறை கலந்த தொனியில் நம் வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லியிருப்போம். ஓய்வு காலத்தில் வீட்டில் இருந்தபடி பேரக்குழந்தைகளை கவனித்துக்கொண்டு, பொழுதுப்போக்குகளை ரசித்துக்கொண்டு, அவ்வப்போது வீட்டில் இருப்பவர்களுக்கு அறிவுரைகளை சொல்லிக்கொண்டு இருப்பதுதான் பெரும்பாலான வயதான பெரியவர்களின் வாழ்க்கையாக இருக்கும்.

ஆனால் பணி ஓய்வுக்குப் பின்னரும் பொதுமக்களுக்காக சேவை செய்தும், விபத்தில் அடிபட்டவர்களுக்கு அந்தக் கணமே ஓடிச் சென்று உதவும் இந்த முதியவரை பார்த்தால் அவரை பாராட்டுவதோடு மட்டுமில்லாமல் அவர் மீதான மரியாதையும் கூடுகிறது. எல்லோராலும் நடமாடும் உயிர் காவலர் என அழைக்கப்படும் இவரின் பெயர் DSP. அதாவது, DSP என்றால் டி.னிவாச பிரசாத். திருச்சியில் வசிக்கும் இவர் திருச்சி சுற்றுவட்டாரங்களில் உயிர் காக்கும் சேவையை செய்து வருகிறார்.

“உயிர் காத்தல் என்றால், உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களுக்கு சிகிச்சை கொடுப்பது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உயிர் காக்கும் சேவை பாதுகாப்பில் இருந்து தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து முதல் உதவி. மூன்றாவதாக சிகிச்சை முறை. நோயினால் ஏற்படும் பாதிப்பினை விட விபத்தினால்தான் பலர் பலியாகிறார்கள். அதற்கு முதலில் விபத்து நடக்காமல் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி விபத்து ஏற்படும் போது உடனடியாக முதலுதவி செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும். உயிர் காத்தல் என்பது இந்த மூன்று படி நிலைகளில் உள்ளது” என்றவர் அவரின் பொதுநல சேவை குறித்து விளக்கினார்.

“எனக்கு 64 வயசு. 1987ல் இந்த சேவையை தொடங்கினேன். சைக்கிள் அதில் சிலேட்டு பலகை மற்றும் முதலுதவிப் பெட்டி… இவை கொண்டு தான் என் சேவை ஆரம்பித்தது. அதாவது, விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைவாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வேன். என்னுடைய சேவையை பாராட்டி தஞ்சாவூர் கலெக்டர் விருது வழங்கினார். அதில் கிடைத்த பரிசு பணத்தை பயன்படுத்திதான் சைக்கிள் வாங்கினேன்.

நான் அடிப்படையில் ரயில்வே ஊழியராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் நான் ரெட் கிராஸ் கமிட்டியில் உறுப்பினராக இருந்ததால், வேலை பார்க்கும் காலத்தில் இருந்தே நான் பல சேவைகளை செய்து வந்தேன். குறிப்பாக அவசர உதவி காலத்தில் நான் முழுமையாக ஈடுபட்டு வந்தேன். ஒருமுறை அலகாபாத்தில் நடந்த தீ விபத்தில் ராணுவ மீட்புக்குழு மற்றும் காவலர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டேன். அதுதான் எனது முதல் களப்பணி. அடுத்தது தஞ்சையில் நடந்த விபத்திலும் மீட்பு பணியில் ஈடுபட்டேன்.

அதில் நான் செய்த சேவையை பாராட்டிதான் தஞ்சை கலெக்டர் விருது வழங்கினார். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மஹாமகத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்க உதவினேன். ரயில்வே பணியில் இருந்து கொண்டேதான் நான் இந்த சேவைகளை செய்து வந்தேன். பணிநேரம் போக மற்ற நேரங்களில் எப்போதும் அவசர உதவிக்காக சைக்கிளில் சுற்றுப் பயணத்திலேயே இருப்பேன். இப்போது மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறேன். என்னுடைய பைக்கில் எப்போதும் ஒரு பெட்டி இருக்கும்.

அதில் முதலுதவிக்கு தேவையான அனைத்துப் பொருட்களுமே வைத்திருப்பேன். மேலும் என் வண்டியில் ஒரு போர்டு மாட்டப்பட்டிருக்கும். அதில் எனது சேவைகள் மற்றும் என்னை அணுக தொலைபேசியும் எழுதி இருப்பேன். பொதுவாக இது போன்ற சமூக சேவையில் ஈடுபடும் போது அதனை பதிவு செய்திருக்க வேண்டும். நான் ரெட் க்ராஸ் அதிகாரிகள் மூலம் இதுகுறித்த அறிவிப்பை வௌியிட்டு பதிவு செய்த பிறகுதான் தொடங்கினேன்’’ என்றவர் முதலுதவி செய்யும் முறைகளை விவரிக்கிறார்.

“நான் சித்த மருத்துவத்தில் முதலுதவிக்கான பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றிருக்கேன். அதனால் முதலுதவிக்கு தேவையான மருந்துகள் எல்லாம் நானே மூலிகைகள் கொண்டு தயாரித்து வைத்திருக்கேன். இந்த மருந்துகள் எரிச்சலை ஏற்படுத்தாது. அவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை ஆம்புலன்சில் ஏற்றும் வரை உடன் இருப்பேன். சில நேரங்களில் துப்பட்டா சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும். அது கூட தெரியாமல் வண்டியை முன்னோக்கி செலுத்தி போய்க்கொண்டிருப்பார்கள். அது கழுத்தை நெரித்து விபத்தினை ஏற்படுத்தும். ஒருமுறை ஒரு பெண்ணின் கழுத்தில் துப்பட்டா சிக்கி கழுத்தை நெரித்ததால், அவர் மயங்கி விட்டார். அந்த சமயத்தில் வண்டியை பின்னோக்கி இயக்கி துணியை சிக்கலில் இருந்து எடுத்து, உடனே முதலுதவி கொடுக்க வேண்டும்.

முதலுதவி மட்டுமில்லாமல் தீ விபத்து, வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை ராணுவ மீட்புக்குழுவினருடன் சேர்ந்து மீட்டிருக்கிறேன். மழையினால் வெள்ளம் ஏற்படலாம் என்ற அறிவிப்பு வந்தவுடன் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இது குறித்து அறிவித்து அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல சொல்வேன். வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களின் விவரம், அவர்களின் தற்போதையை நிலை, பாதிப்பின் அளவு போன்ற விவரங்களை தரவுகளாக சேமித்து அதிகாரிகளுக்கு தெரிவிப்பேன். நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுவேன்.

திருச்சி சுற்று வட்டாரங்களில் மட்டுமில்லாமல் திருப்பூர் வரையிலும் என்னுடைய சேவைப் பயணம் தொடர்கிறது. இதுவரை 42,725 விபத்துகள் நடந்த இடங்களுக்கு சென்று விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்திருக்கிறேன். இதற்காக நான் பயணித்த தூரம் 52,225 கிலோ மீட்டர். இரு சக்கர வாகனத்தில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் செய்யும் முதல் நபர் நான்தான் என்று சொல்வதில் நான் பெருமைக் கொள்கிறேன். நான் மட்டுமே சைக்கிளில் பயணிப்பதால் விபத்தினை தடுக்க முடியாது என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அப்படியே ஏற்பட்டால் அதற்கான முதலுதவி குறித்தும் அறிவுரை வழங்குகிறேன்’’ என்றவர் ரயில்வே சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை வரும் நாட்களில் நடத்த இருக்கிறார்.

“கடந்த 2022ல் நான் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றேன். பணியில் இருக்கும் போது தொடங்கிய என்னுடைய சேவை பணி நிறைவுக்கு பிறகும் தொடர்கிறது. பள்ளியில் நான் NCC பயிற்சியில் இருந்ததால், அது நான் தற்போது செய்து வரும் சேவைக்கு உதவியாக இருக்கிறது. பணி ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். மேலும் நான் பெயின்டிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால், பெயின்டிங் வேலைகள் மற்றும் விளம்பர பலகைகளும் எழுதி தருகிறேன்.

அதில் வரும் வருமானத்தில் 25% என்னுடைய சேவைப் பணிக்காக பயன்படுத்திக் கொள்கிறேன். திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் நானும் என் மனைவியும் வசித்து வருகிறோம். எங்களின் ஒரே மகனை இழந்த பிறகு விபத்தில் என்னால் காக்கப்பட்ட பலரும் என்னுடைய மகன், மகள்களாகவே பார்க்கிறேன். மேலும் என்னைப் பார்த்து இந்த சேவையில் ஈடுபட்டு வருபவர்களும் என்னிடம் மிகவும் அன்புடன் பேசுவார்கள். அந்த விதத்தில் எனக்கு நிறைய குழந்தைகள், மகள்கள் உள்ளனர். இறுதிவரை பொதுமக்களுக்கு சேவை செய்வதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் எனது விருப்பம்” என்றார் நெகிழ்ச்சியாக.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post நடமாடும் உயிர் காவலர்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED விரும்பும் முறையில் வீட்டுச் சாப்பாடு!