×
Saravana Stores

பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: கூடுதலாக 2 தனிப்படைகள்; போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர்: பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அவிநாசிபாளையம் சேமலைகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, விவசாயி. இவரது மனைவி அலமாத்தாள். இவர்கள் தங்களது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து, விவசாயம் செய்து வந்தனர். இவர்களது மகன் செந்தில்குமார் (46). இவர், தனது மனைவி கவிதா, மகன் மற்றும் மகளுடன் கோவையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ந்நிலையில் செந்தில்குமார் நேற்று சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து தங்கினார்.

இன்று காலை உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க செல்ல இருந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள சவர தொழிலாளியை அதிகாலையில் வருமாறு அழைத்திருந்தார். ற்றிரவு செந்தில்குமார் தன் பெற்றோருடன் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த சவர தொழிலாளி தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி, எஸ்பி அபிஷேக் குப்தா, பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் வந்தனர்.

அவர்கள் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் நேற்று தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கொள்ளையர்கள் வந்தபோது தோட்டத்தில் கட்டிவைத்திருந்த நாய்கள் குரைக்க தொடங்கின. இதைக்கேட்டு விழித்தெழுந்த செந்தில்குமார், கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் நின்றிருந்தனர். அவர்கள், செந்தில்குமாரை விலக்கிக்கொண்டு வீட்டினுள் நுழைய முயன்றுள்ளனர். அதை, செந்தில்குமார் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் அரிவாளால் சரமாரியாக செந்தில்குமாரை வெட்டிக் கொன்றது. பின்னர் வீட்டிற்குள் சென்று தெய்வசிகாமணி, அலமாத்தாளை அக்கும்பல் வெட்டிக்கொன்று விட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்றனர்.

பல்லடம் கொலை கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது‌. அரிவாள் மற்றும் இரும்பு ராட் உள்ளிட்டவை பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தடயவியல் நிபுணர்கள் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கை விசாரிக்கக் கூடுதலாக 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: கூடுதலாக 2 தனிப்படைகள்; போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Palladium ,Tiruppur ,Palladam ,Devisikamani ,Avinasipalayam Samalaikountampalaya ,Tiruppur District, Palladam ,Alamatha ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 3 பேரை கொலை செய்து வீட்டில் திருட்டு