புதுடெல்லி: எஸ்பிஜி, சிபிடி, ஏஎஸ்ஏல் படைகளில் பயிற்சி பெற்ற பெண் கமாண்டோக்கள் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. பிரதமர் மோடிக்கு பின்னால் பெண் பாதுகாப்புக் காவலர் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நடந்து சென்ற போது, அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த பெண் காவலர் பின் தொடர்ந்து சென்றார். அதனால் இந்த புகைப்படம் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் பெண்களை பணியில் அமர்த்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பிரதமரின் பாதுகாப்பில் பெண் கமாண்டோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பெண் கமாண்டோக்கள் ெபரும்பாலும் நாடாளுமன்றம் போன்ற முக்கியமான இடங்களிலும், பெண் விருந்தினர்கள் பிரதமரை சந்திக்கும் சூழல் உள்ள இடங்களிலும் பணியமர்த்தப்படுகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு பிறகு, பிரதமரின் நெருக்கமான பாதுகாப்பு குழுவில் (சிபிடி) பெண் கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் பிரதமரைச் சந்திக்கும் பெண் விருந்தினர்களை முன்கூட்டியே சோதனை செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இதன் பொருள் என்னவென்றால், இந்த பெண் கமாண்டோக்கள் பிரதமரைச் சுற்றியுள்ள பாதுகாப்பின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல், பிரதமர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்குச் செல்லும்போது, அவருடன் பெண் கமாண்டோக்களும் அனுப்பப்படுகிறார்கள்.
அங்கு அவர்கள் மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பு குழுவின் (ஏஎஸ்எல்) கட்டுப்பாட்டில் பணியாற்றுவார்கள். தற்போது எஸ்பிஜி-யில் சுமார் 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். இவர்கள் மேம்பட்ட பாதுகாப்பு, நெருக்கமான பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றனர். பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கடந்த 1985 முதல் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கங்கனாவும், சர்ச்சையும்…
மோடியின் பாதுகாவலராக பெண் கமாண்டோ இருக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட பதிவில், ‘லேடி எஸ்பிஜி’ ; பெண்கள் அதிகாரமளிப்பதற்கான மிகப்பெரிய எடுத்துக்காட்டு’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்திற்கு தலைப்பு ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் மோடியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண், எஸ்பிஜி படைப் பிரிவை சேர்ந்தவரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில் மோடியின் பாதுகாவலராக இருந்த பெண் எஸ்பிஜி படைப்பிரிவை சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பாதுகாவலர் என்றும், சிஆர்பிஎப் பிரிவில் உதவி கமாண்டண்டாக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது. எனவே பிரதமர் மோடிக்கு பின்னால் நிற்கும் பெண், எஸ்பிஜி கமாண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர் அல்ல என்றும், தவறான தகவலை கங்கனா வெளியிட்டதாகவும் பல்வேறு விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
The post பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பெண் கமாண்டோ?.. சமூக ஊடகங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.