* நேற்றிரவு டெல்லி, இன்று மும்பையில் கூடி இறுதி முடிவு
* வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்பு
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு வெளியாகி 7 நாட்களான நிலையில் இன்று மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து மும்பையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 230 இடங்களை வென்றது. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதியை (எம்விஏ) 46 இடங்களில் வெற்றிப் பெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியாகி 7 நாட்களாகியும் முதல்வர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மகாயுதி கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும் கூட, இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வருகிறது.
அதனால் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்? என்ற சஸ்பென்ஸ் தொடர்கிறது. இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித் ஷாவின் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மகாயுதி தலைவர்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு இடைக்கால முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமை தாங்கினார். மகாயுதி கூட்டணியின் முதல் கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் போன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர். நள்ளிரவு வரை நடந்த கூட்டத்தில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து இடைக்கால முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பு நேர்மறையானதாக இருந்தது.
அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினோம். மேலும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் யார் முதல்வர்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது’ என்றார். டெல்லியில் ஆலோசனை நடத்திய மகாயுதி கூட்டணியின் மகாராஷ்டிரா தலைவர்கள் இரவோடு இரவாக மும்பை வந்து சேர்ந்தனர். அவர்கள் இன்று மும்பையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் புதிய அரசு அமையும் என்றும், அதிகபட்சமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் இருப்பார்கள் என்று கூட்டணி தலைவர்கள் கூறினர்.
The post தேர்தல் முடிவு வெளியாகி 7 நாளாகியும் இழுபறி: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? appeared first on Dinakaran.