சென்னை : பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினராக பட்டியலிடப்பட்ட மாணவர்கள், கோடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ முதுகலை இடங்களை பெற்று இருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உடைய உயர்சாதி வகுப்பினரை ஒன்றிய அரசு EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினராக வகைப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அந்த வகையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த சுமார் 140 பேருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு கல்வி கட்டணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ. 90 லட்சம் வரை வசூலிக்கப்படும் நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் என சான்றளிக்கப்பட்ட மாணவர்களால் இந்த இடங்களை எவ்வாறு பெற முடிந்தது என்று கல்வி ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 3 ஆண்டு முதுகலை படிப்பிற்கு கோடிக்கணக்கான ரூபாயை கட்டணமாக செலுத்த தயாராகி உள்ள அவர்களை, பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் என்று எப்படி அங்கீகரிக்க முடியும் என்று அவர்கள் வினவுகின்றனர். பெரும் செல்வந்தர்களாக உள்ள உயர் வகுப்பினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்ற போலி சான்றிதழ் மூலம் முறைகேடாக இட ஒதுக்கீடு பெற்று இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே போலி சான்றிதழ் மூலமாக மருத்துவ முதுகலை இடங்களை பெற்றுள்ள மாணவர்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று முதுகலை நீட் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
The post தனியார் மருத்துவ கல்லூரிகளில் கோடிகளில் கட்டணம் செலுத்தும் “EWS” பிரிவு மாணவர்கள் :பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என போலி சான்றிதழா? appeared first on Dinakaran.