பெரம்பலூர் : பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பெரம்பலூர் கல்பாடியை சேர்ந்த 17வயது மாணவி, கடந்த 2021 செப்.28ம் தேதி காலை 9 மணி அளவில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பள்ளியின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ஜெயசூர்யா (20), மாணவியை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயசூரியாவை கைது செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக 3மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதம், அபராதம் கட்ட தவறினால், மேலும் 15 நாட்கள் சிறை தண்டனை, மேலும் முதல் குற்றவாளி என்பதால் மூன்று வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், போக்சோ சட்டத்தின் பிரிவு 7 உடன் இணைந்த 8-ன் படியான குற்றத்திற்கு மூன்று வருடம் கடுங் காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6மாதம் சிறை தண்டனை விதித்தும்,
போக்சோ சட்டத்தின் பிரிவு 11(4) உடன் இணைந்த 12 படியான குற்றத்திற்கு மூன்று வருடங்கள் கடுங் காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.10,000 அபராத விதித்தும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6மாதங்கள் சிறை தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆஜரானார்.
The post பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் வாலிபருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை appeared first on Dinakaran.