*இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
கறம்பக்குடி : கறம்பக்குடி பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக 200 ஏக்கர் பயிர்கள் நீரால் மூழ்கி சேதமானது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ரெகுநாதபுரம் பகுதியில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 2 நாட்களாக கன மழை பெய்தது. சில பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வந்தது.
இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ரெகுநாதபுரம் மகளிர் கல்லூரி எதிரே அமைந்துள்ள விவசாய நிலங்களில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்த வயல்களில் அருகே சீராக செல்லக்கூடிய வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு முற்றிலும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மழைநீர் வயலில் தேங்கி நின்றது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, மழைநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்புகளை வருடம் தோறும் சீரமைக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தற்போது மழைநீர் செல்ல முடியாது சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் நிரம்பி வயல்களை மூழ்கடித்து விட்டன.
இதனால் எங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே வயல்களில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் வாய்க்காலில் அடைப்பு அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் பகுதிகளில் மழை 200 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது appeared first on Dinakaran.