*சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
சிவகாசி : சிவகாசியில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு, தற்போது சேதமடைந்த நிலையில் உள்ள சுகாதார வளாகங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று, மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:
ஸ்ரீநிகா: சிவகாசி, திருத்தங்கல் என்ற வேறுபாடின்றி வளர்ச்சி பணிகள் நடைபெற வேண்டும். எனது வார்டில் பழைய பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மகேஸ்வரி: மாநகராட்சி கூட்டம் மாதந்தோறும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிகலா: எனது வார்டில் எந்த நிதியில் அங்கன்வாடி மையம் கட்டப்படுகின்றது. இது குறித்து எனது கவனத்திற்கு ஏன் கொண்டு வரப்படவில்லை.
ஏ.சி.சூர்யா: மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். எனது வார்டில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அவற்றை புதுப்பிக்க வேண்டும்.
சேதுராமன்: திருத்தங்கல் மண்டலத்தில் 12 வார்டுகளில் சுகாதார பணிகள் மந்த நிலையில் நடக்கிறது. 25 நபர்களை வைத்து 12 வார்டுகளில் பணி நடக்கிறது. மாநகராட்சியில் தனியார் துப்பரவு பணிகளுக்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும். திருத்தங்கல் மண்டலத்திற்கு தனியாக துணைப் பொறியாளர் நியமிக்க வேண்டும்.
நிலானி மணிமாறன்: குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தனலட்சுமி: புள்ளைக்குழி பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகின்றது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.செல்வம்: எனது வார்டில் குப்பைகள் நிறைந்து சுகாதார சீர்கேடு நிலவுகின்றது. அவற்றை அகற்ற வேண்டும்.
சாமுவேல்: மாநகராட்சி தண்ணீர் விநியோகம் செய்யும் வண்டிகளில் தண்ணீர் டேங்க் சுகாதாரமற்று பழுதடைந்து காணப்படுகின்றது. அவற்றை மாற்ற வேண்டும். மாநகராட்சி பள்ளிகளில் சென்னை போன்று பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பெற்று பொத்துமரத்து ஊருணியை தூர்வார வேண்டும்.
ஞானசேகரன்: பொத்துமரத்து ஊருணி ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுபடி அகற்ற வேண்டும்.
குருசாமி: தமிழக முதல்வர், திமுக அமைச்சர்களை அவமரியாதையாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வரும் நபர்.
மாநகராட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் டெண்டர் எடுத்து பணி செய்து வருகின்றார். இதனை ஏற்க முடியாது. தமிழக அரசை விமர்சிக்கும் எந்த நபருக்கும், மாநகராட்சியில் பணிகள் வழங்க கூடாது. உடனடியாக அவரை வெளியேற்ற வேண்டும்.
சேவுகன்: சிவகாசி மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த நிலையில் உள்ள 30திற்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்களை மாரமத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் மிகவும் சேதம் அடைந்துள்ள சுகாதார வளாகங்களை மராமத்து செய்யாமல் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பை பாஸ் சாலையில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும். மாநகராட்சியில் துப்பரவு பணிகளுக்கு கூடுதல் வாகனங்கள் வாங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மேயர் சங்கீதா இன்பம், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.
எம்எல்ஏ கோரிக்கை மனு
சிவகாசி மாநகராட்சி கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க சிவகாசி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் காலை 10.15க்கு வருகை தந்தார். ஆனால் நேற்று முகூர்த்த தினம் என்பதால் பெரும்பாலான கவுன்சிலர்கள் பல்வேறு நிகழ்சிகளுக்கு சென்றுவர தாமதம் ஏற்பட்டது.
இதனால் கூட்ட அரங்கில் 10.45 மணி வரை காத்திருந்த எம்எல்ஏ அசோகன், ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அறைக்கு சென்று கோரிக்கை மனு கொடுத்துவிட்டு புறப்பட்டார். மனுவில் மாநகராட்சியில் மழைகாலங்களில் தூய்மை பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்றும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிக்கொண்டிருந்த போது 21வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தனமாரி திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், வாறுகால் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும், அப்பகுதிகளை ஆணையாளர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் சந்தனமாரி தனது இருக்கையில் அமர்ந்தார்.
The post 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பலத்த சேதமடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.