மில் ரகங்களுடன் போட்டி போட முடியாமல் புறக்கணிப்பு வருவாய் இன்றி அழியும் நிலையில் கைத்தறி தொழில்

*புதிய திட்டங்கள் செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில் கைத்தறி தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் அழிவை நோக்கி நகர்ந்து செல்கிறது. எனவே அரசு புதிய திட்டங்களை மேற்கொண்டு கைத்தறி தொழிலில் மறுவாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதியில் நெசவுத் தொழில் பிரதான தொழிலாக செய்து வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட கைத் தறிகளும் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் கைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இங்கு 7 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொடுக்கப்படும் நூல்களை நெசவாளர்கள் சேலையாக உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

கூட்டுறவு சங்கங்களில் இருந்து கொடுக்கப்படும் பாவுகளை பன்னேற்றம் செய்தும், நூல்களில் கண்டு தயாரித்த பின்னர் சேலை உற்பத்தி செய்வார்கள். கைத்தறியில் தமிழக அரசின் பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் திட்டம், விலையில்லா சீறுடை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கீழ் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது பல ஆண்டுகளாக பொங்கல் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் சேலைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் ஏதும் இல்லாத கைத்தறி வகைகளில், பழைய குழித்தறிகள், பெஞ்ச் தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த கைத்தறிகளில் ஒரு நாளைக்கு ஒரு சேலைகள் உற்பத்தி செய்ய முடியும். கூட்டுறவு சங்கங்களில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட சேலைக்கு ரூ.160 வழங்கப்படுகிறது. நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் சேலைக்கு வாரம் ஒரு முறை கூலி வழங்கப்படும். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் அந்தந்த மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகையை சங்கத்தில் வரவு வைக்கப்படும். இத்தொகை மூலம் நெசவாளர்களுக்கு கூலி தொடர் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி தொழில்கள் செய்து வந்த நிலையில் தற்போது 200க்கும் குறைவான கைத்தறி தொழில்கள் நடைபெற்று வருகிறது. மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப புதுப்புது ரகங்கள் கைத்தறியில் அறிமுகப்படுத்தவில்லை. மேலும் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களும், மில் ரகங்களுடன் மார்க்கெட்டில் போட்டி போட முடியாமல் கைத்தறிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கைத்தறிகள் குறைந்து வருவதால் கூட்டுறவு சங்கங்களும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

மேலும் கைத்தறியில் குறைவான சேலைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், நெசவாளர்கள் பெடல் தறிக்கும், விசைத்தறிக்கும் மாறி வருகின்றனர். இதனால் கைத்தறி அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.கைத்தறியால் போதிய வருமானம் ஈடுசெய்ய முடியாத காரணத்தால் நெசவாளர்கள் பெடல் தறியில் மாறி நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த பெடல் தறியில் அரசின் பொங்கல் வேட்டி, சேலைகளை கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்து வருகின்றனர். பெடல் தறியில் உற்பத்தி செய்யப்படும் சேலைக்கு 1 க்கு ரூ.95 கூலி தரப்படுகிறது. கைத்தறி அழிந்து வருவதால் அரசு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இலவச பெடல் தறிகள் வழங்கப்பட்டது.

ஆனால் வேட்டி, சேலைகள் உற்பத்தியில் பன்னேற்றம், கண்டு தயார் செய்தல், தறி பழுது பார்த்தல் உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய முடியாததால் பெடல்தறி தொழிலும் நலிவடைந்து வருகிறது.இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் தெரிவிக்கையில், ‘‘கைத்தறி தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் தொழில் அழிந்து வரும் நிலையில் உள்ளது. பெடல் தறியிலும் போதிய வருமானம் இல்லை.

இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் நெசவாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளன. மேலும் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே கைத்தறி நெசவாளர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க தேவையான புதிய திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்’’என தெரிவித்தனர்.

The post மில் ரகங்களுடன் போட்டி போட முடியாமல் புறக்கணிப்பு வருவாய் இன்றி அழியும் நிலையில் கைத்தறி தொழில் appeared first on Dinakaran.

Related Stories: