×

ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா?

?ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா?
– செல்வி, திருவண்ணாமலை.

எல்லா நேரங்களிலும் வைக்க வேண்டியது இல்லை. சிலர் அதில் ஒரு கரித்துண்டு போடுவார்கள். சிலர் வெற்றிலை போட்டு அதில் கற்பூரம் ஏற்றுவார்கள். வெற்றிலை போடுவதால் கற்பூரம் மிதந்து எரியும். கற்பூரம் கரைவது போல திருஷ்டி கரையும். சாதாரண நேரங்களில் வெறும் ஆரத்தி போதுமானது.

?வயதில் சிறியவர்கள் பெரியவர்களை ஆசிர்வதிக்கலாமா?
– விஜயராகவன், வேலூர்.

கூடாது. ஆனால், இதற்கு விதிவிலக்கு உண்டு. அவர் ஞானவிருத்தர், அதாவது ஞானத்தினால் பழுத்தவராக இருந்தாலோ, திருமணம் முதலிய சடங்குகள் செய்யும் பொழுது புரோகிதர் ஸ்தானத்திலிருந்தாலோ, அவரை வணங்கலாம். ஆசிர்வாதம் பெறலாம். அங்கு அவர்கள் ஆசிதரவில்லை. அவர்கள் ஞானம் ஆட்சி தருகிறது.

?வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்கிறார்கள். எல்லாம் முக்கியமா?
– நித்யா, திருநெல்வேலி.

வாஸ்து சாஸ்திரத்தை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியாது. ஆனால், சின்ன சின்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஈசானியம் எனப்படும் வடகிழக்குப் பகுதியை அடைத்து விடக்கூடாது. அந்த இடம் காற்று வரும் படியாக திறந்த இடமாக இருப்பதாக நல்லது. முடிந்தால் மற்ற இடங்களைவிட ஓரளவுக்கு ஒரு அங்குலமாவது தாழ் நிலையில் இருப்பது நல்லது. அக்னி மூலையிலும் ஈசானிய மூலையிலும் கழிவறைகளை அமைத்துக் கொள்ளக் கூடாது. இப்படி ஒரு சில விஷயங்களை அனுசரித்தால் போதும்.

?திருஆவினன் குடி எங்கு இருக்கிறது?
– அருள்பிரகாஷ், மதுரை.

பழனி மலையின் அடிவாரப் பகுதியை “திருஆவினன் குடி’’ என்று சொல்வார்கள். அந்த அடிவாரக் கோயிலில் உள்ள முருகனை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து முருகன் காட்சி தருகின்றார். இதை ஆதி கோயில் என்று சொல்வார்கள்.

?பஞ்சாங்கத்தில் விஷமாசம் என்று போட்டு இருக்கிறது? அதென்ன விஷமாசம்?
– மகேஷ்பாபு, சென்னை.

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் வரும். ஆனால், அபூர்வமாக ஏதாவது ஒரு மாதத்தில் பௌர்ணமி வராது. அல்லது அமாவாசை வராது. முதல் மாதத்தின் கடைசி தேதியிலும், அடுத்த மாதத்தின் முதல் தேதியிலும் வந்துவிடும். அந்த குறிப்பிட்ட மாதத்தில் வராத சூழ்நிலை இருக்கும். அப்படி இருந்தால், அந்த மாசம் விஷமாசம் என்பார்கள். பௌர்ணமியோ, அமாவாசையோ இல்லாத மாசம் விஷமாசம். அதைப் போலவே சில மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வரும். உதாரணமாக, மாத ஆரம்பத்தில் பௌர்ணமி வந்து 31, 32 தேதியுள்ள மாதமாக இருந்தால், மாதக் கடைசியிலும் அமாவாசை வந்துவிடும். அந்த மாதத்தை மல மாதம் என்பார்கள். இப்படி வருகின்ற மாதம், சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற மாதம் அல்ல.

?சிலர் வியாழக்கிழமை பொது இடத்தில் கூட்டமாக வானத்தைப் பார்க்கின்றார்கள், ஏன்?
– பாலகுமாரன், புதுச்சேரி.

அவர்கள் கருட தரிசனம் பார்க்கின்றார்கள். வியாழக்கிழமை கருட தரிசனம் பார்ப்பது நம்முடைய தோஷங்களை நீக்கும் என்பது நம்பிக்கை. அதனால், பல ஊர்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாலை நேரத்தில் கருட தரிசனத்தைத் பார்ப்பதற்காக கூட்டம் கூடும். இதற்கென்று சில ஊர்களில் சங்கம்கூட வைத்திருக்கிறார்கள். கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்:

ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்.
திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.
புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
வியாழன் கருட தரிசனம் – சகல நலங்களும் ஒருசேர தரும்.

வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்.
சனி கருட தரிசனம் – நற்கதி தரும்.
கருடனை தரிசிக்கும் போது, கருட காயத்ரி சொல்லுங்கள்:
‘ஓம் தத்புருஷாய வித்மஹே,
ஸூவர்ண பட்சாய தீமஹி,
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

?கடந்த காலங்களில் செய்த தவறை எண்ணி வருந்துவது நல்லதா?
– சிவசங்கர், சிவகங்கை.

இதில் என்ன சந்தேகம்? செய்த தவறு எண்ணி வருந்தத்தான் வேண்டும். அதைவிட முக்கியம், தவறில் இருந்து திருந்த வேண்டும். ஆனால், சிலர் பழைய தவறுகளை எண்ணி எண்ணியே நொந்து போகிறார்கள். அவர்கள் புதிதாக வாழ்வதும் இல்லை. செயல்படுவதும் இல்லை. நடந்து போன பழையவைகளைப் பற்றியே வேறு வேலை செய்யாமல் திரும்பத் திரும்ப வருந்துவதில் என்ன பயன்? செய்துவிட்ட தவறை அது சரி செய்து விடுமா, என்ன? ஆகையினால், தவறை நினைத்து வருந்துவதோடு திருந்தவும் பார்க்க வேண்டும். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் அதே தவறுகள் நடக்காமல் இருக்க உறுதி செய்து கொள்ள வேண்டும். இதுதான் நடைமுறையில் செய்யக் கூடியது. மேற்கொண்டு தவறு செய்யாமல் இருக்கும் விழிப்புணர்வைத் தருவது.

?அன்பு எதைச் சாதிக்கும்?
– செந்தில் குமார், சென்னை.

அன்பு சாதிக்காத விஷயம் என்று எதுவும் இல்லை. அது எல்லாவற்றையும் சாதிக்கும். முதலில் நம்முடைய மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆற்றின் அடிப் பகுதி எத்தனையோ மேடு பள்ளங்களோடு இருந்தாலும், ஆற்றின் மேல் பகுதி சமமாகவே இருக்கும். அதுபோல் தன் சொந்த சிக்கல்கள் எத்தனையோ இருந்தாலும் அன்பு செலுத்தும் மனிதன் தன்னுடைய மனதின் மேற்பரப்பை சீராகவே வைத்துக் கொள்வான். இது ஒரு மிகப் பெரிய நன்மை அல்லவா.

?இன்றைய சமூகம் எதை நோக்கி நகர்கிறது?
– பரிமளா, ஸ்ரீ ரங்கம்

சொல்வதற்கு பயமாக இருக்கிறது. ஆனாலும்கூட நடைமுறையில் எதிர்கால சமுதாயம் மிகமிக இக்கட்டான, எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத அழிவை நோக்கி நகருகிறதோ என்று தோன்றுகிறது. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் ஒரு காரணம் ஆகிவிடுகின்றோம். வாழ்வதற்கு பணம் தேவை என்பதை தாண்டி, பணம் மட்டுமே வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். நாம் வந்தது மட்டுமல்லாமல், நம்முடைய குழந்தைகளையும் அதை நோக்கியே தொடர் ஓட்டம் ஓடும் ஒரு சூழ்நிலை உருவாக்கிவிட்டோம். இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள், நல்லவனாக இரு, நியாயமாக இரு, கருணையோடு இரு, தெய்வ பக்தியோடு இரு என்று சொல்லி வளப்பதாகத் தெரிய வில்லை.

மாறாக எப்படியாவது படி, எதையாவது படி, நிறைய சம்பாதி என்று சொல்லி வளர்க்கின்றார்கள். ஒருவனின் அறிவும் ஆற்றலும், திறமையும், அவனுக்குத் தரப்படும் கௌரவமும், அவன் எவ்வளவு நல்லவன் என்பதைவிட, எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அவலத்தை நாம் கூட்டாக செய்து வருகிறோம். உலகப் பேரழிவுகளிலே இதுதான் மிகப் பெரிய பேரழிவு. ஆனால், அதை நோக்கித்தான் நடந்து கொண்டிருக்கின்றோம். இதை சற்று நிதானத்தோடு சிந்தித்து மாற்றிக் கொண்டு நடக்காவிட்டால், நம்முடைய பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகளின் எதிர்காலம் சவாலுக்கு உரியதாகத்தான் இருக்கும்.

?ஆன்மிக உலகம் என்கிறோம். ஆன்மிகச் சிந்தனைகள் தேவை என்கிறோம். ஆன்மிகம் இருப்பதைக் கொண்டு வாழ் என்ற சோம்பேறித்தனத்தைப் போதிப்பதாகத் தானே இருக்கிறது?
– விஜயலட்சுமி, விழுப்புரம்.

பெரும்பாலோர் அமைதியாக வாழ்வதை சோம்பேறித் தனமாக வாழ்வதாகவும், பரபரப்போடு வாழ்வதை புத்திசாலித் தனமாக வாழ்வதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போட்டி உலகம், இந்த போட்டியில் உனக்குரிய தகுதியை நீ பெற்றுக் கொண்டுவிட்டால், நீ தோற்கடிக்கப்படுவாய் என்று நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்லுகின்றோம், நினைத்துப் பாருங்கள். இது போட்டி உலகமாக மாறிவிட்டது என்பது உண்மைதான்.

ஆனால், இந்த போட்டி யாரால் ஏற்படுத்தப்பட்டது? நம்மைச் சுற்றி எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அந்த உயிரினங்கள் எதுவும் இந்த மனித குலத்துக்குச் சவாலாக அமைந்துவிடவில்லையே! அவைகள் போட்டியை ஏற்படுத்தவில்லையே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயித்து விடுவது என்பது எத்தனை அவலம்? எங்கே சுதந்திரம் இருக்கிறது? ஆனால், ஆன்மிகம் சுதந்திரத்தைச் சொல்லித் தருகிறது. “பூமியில் இது எவருக்கும் அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் என்ற கம்பீரமான வாழ்க்கையைச் சொல்லித் தருகின்றது” என்பதை மறந்து விட்டோம். தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரத்தில் “வாழும் சோம்பரை உகத்தி போலும்” என்று ஒரு வரி வரும்.

இதன் பொருள்: தனக்காக வாழ்பவர்களை கெடும் சோம்பர் (பாழாக்கும் சோம்பேறிகள்) என்பது ஆழ்வார் திருவுள்ளம். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறுபடுத்துவதற்காக, ஆழ்வார் வாழும் சோம்பர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

?எதில் விழிப்புணர்வு அதிகம் தேவை?
– அருண், திருவள்ளூர்.

எந்தெந்த செயலைச் செய்ய வேண்டும் என்பதைவிட எந்தெந்த செயலைச் செய்யக் கூடாது என்பதில் விழிப்புணர்வு தேவை. எந்தெந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதில் விழிப்புணர்வு தேவை. என்னென்ன பேச வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் பேசக் கூடாது என்பதில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் பார்க்கக் கூடாது என்பதில் விழிப்புணர்வு தேவை.

எதையெல்லாம் கேட்க வேண்டும் என்பதை தவிர, எதையெல்லாம் கேட்கக் கூடாது என்பதில் விழிப்புணர்வு தேவை எதையெல்லாம் படிக்க வேண்டும் என்பதைவிட எதையெல்லாம் படிக்கக்கூடாது என்பதில் கவனம் தேவை. இதை எல்லாவற்றையும் செய்துதான் சேர்த்துத்தான் ஒரே வரியில் ஆண்டாள் ‘‘செய்யாதன செய்வோம்’’ என்று பாடிவிட்டார்.

?நம்மிடம் பகைமை கொண்டவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டுமா?
– கீர்த்திகா, சென்னை.

கேட்க வேண்டும். அவர்கள் நம்மிடம் பகைமை கொண்டவர்களாக இருக்கலாம். ஆனாலும், அவர்கள் பேச்சை நாம் அலட்சியப்படுத்த வேண்டியது இல்லை. காரணம் என்னவென்றால் நம்மிடம் அன்பு வைத்திருப்பவர்கள் நம்மிடம் உள்ள நல்ல குணத்தை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில நேரத்தில் இல்லாத குணத்தைக்கூட இருப்பதாகச் சொல்லி நம்மிடம் பயனடைபவர்களும் உண்டு ஆனால் நம்மிடம் பகைமை பாராட்டுகின்றவர்கள், நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்பதை எல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லுவார்கள்.

அந்த பட்டியல் உண்மையாக இருந்தால் அதை திருத்திக் கொள்வதன் மூலமாக நாம் இன்னும் சிறப்பாக வாழ முடியும். இதற்கு ஆன்மிகத்தில் ஒரு உதாரணம் சொல்லுகின்றேன், பராசரப்பட்டர் என்று ஒருவர் இருந்தார் அவர் ஸ்ரீ ரங்கம் பெருமாளுக்கு மிகச் சிறப்பான கைங்கரியத்தைச் செய்து கொண்டிருந்தார். அவருக்கு மிகப் பெரிய சீடர் குழாம் இருந்தது. இதைப் பார்த்து திருவரங்கத்திலேயே ஒரு பக்தருக்கு பொறாமை வந்தது.

அவர் ஒருநாள் பெருமாள் முன்பு பராசரப்பட்டரின் பல்வேறு குறைகளை பட்டியல் போட்டு கடுமையாகத் திட்டினாராம். அதைக் கேட்டு பட்டர், கோபமடையவில்லை. அவர் புன்முறுவலோடு ஏற்றுக் கொண்டு தன்னிடமிருந்த தோடாவைப் (தங்கக் காப்பு) போட்டாராம். சீடர்கள் வியந்தனர் அப்பொழுது அவர் சொன்னாராம்; “நீங்கள் எல்லாம் என்னுடைய குணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தோஷத்தைச் சொல்வதற்கு ஆளில்லையே என்று நினைத்தேன் இன்றைக்கு பெருமாள் முன்னாலேயே என்னுடைய தோஷங்களை எல்லாம் சொல்லி என்னுடைய குறையைத் தீர்த்துவிட்டார்’’ என்றாராம்.

எந்த தோஷமும் இல்லாத ஒரு மஹானே இப்படி நடந்து கொள்ளும் பொழுது, பல தோஷங்களோடு இருக்கக்கூடிய நாம், அதனை நீக்கிக் கொள்ளும் வாய்ப்பாக, நம்மை பிடிக்காதவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கேட்பது நல்லது.

?நாம் கோயிலுக்குப் போய் சாமியைக் கும்பிடுகிறோம். அப்படி இருக்கும் பொழுது, ஏன் சாமியை அலங்காரம் செய்து வீதி ஊர்வலமாக வருகின்றார்கள்?
– குமார், தஞ்சாவூர்.

நல்ல கேள்விதான். கோயிலுக்கு எல்லோராலும் போக முடிவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இப்படி பலரும் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க முடியாத நிலை இருக்கிறது. ஆகையினால், இறைவன் தன்னுடைய பக்தர்களைப் பார்ப்பதற்கு ஒரு நாள் வீதி வலம் வருகின்றான். ஆகம விதிகள் சாஸ்திர விதிகள் என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டாலும் அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் நன்மையை உத்தேசித்தே வகுக்கப்பட்டிருக்கின்றன.

தேஜஸ்வி

 

The post ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலை கற்பூரம் வைக்க வேண்டுமா? appeared first on Dinakaran.

Tags : Aarti ,Tiruvannamalai ,
× RELATED விவாகரத்து கோரி மனு: நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்