* சாலை வசதி இல்லாததால் அவதி
* வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
தர்மபுரி : பென்னாகரம் அருகே சாலை வசதியில்லாத அலக்கட்டு மலையில், பாம்பு கடித்த சிறுமியை, தூளி கட்டி 8 கி.மீ. தூக்கி சென்ற நிலையில், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால், சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அலக்கட்டு மலைக்கிராமம். இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு செல்ல, பாலக்கோடு ஒன்றியத்தில் சீங்காடு மலையடிவாரம் வரை மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும். அதன் பின்னர், சுமார் 8 கிலோ மீட்டர் தூரம், நடந்து தான் அலக்கட்டு கிராமத்துக்கு செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா, விவசாயி. இவரது மனைவி சிவலிங்கி. இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது கடைசி மகள் கஸ்தூரி(13), 8ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மதியம் 1 மணியளவில், வீட்டினருகே கீரை பறித்து கொண்டிருந்த போது, விஷப்பாம்பு ஒன்று சிறுமியை கடித்துள்ளது. இதனால், அச்சமடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்த விபரத்தை கூறி விட்டு மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை தூளியில் கட்டி, மலைப்பாதையில் 8 கிலோ மீட்டர் கால்நடையாக தூக்கிக்சென்றனர்.
பின்னர், அங்கிருந்து பாலக்கோடு தாலுகா, சீங்காடு கிராமத்திற்கு வந்தனர். அங்கு தார்சாலைக்கு வந்து தயாராக நின்ற ஆட்டோவில் ஏற்றியபோது, சிறுமி முழுவதுமாக சுயநினைவை இழந்து விட்டாள். பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘போதிய சாலை வசதி இல்லாததால், மலைப்பகுதி வழியாக கால்நடையாக நடந்து செல்லும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் டிராக்டர் செல்லும் வகையில், அலக்கட்டு மலைக்கான மண்பாதை சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்தடுத்த மலை முகடுகளில் அமைந்துள்ள ஏரிமலை, கோட்டூர் மலைகளுக்கும் சமீபத்தில் டிராக்டர்கள் மட்டும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அலக்கட்டு மலையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஆனால், இந்த பாதை கரடு, முரடானதாக உள்ளது.
மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. தார்சாலை வசதி இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல், அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.இதற்கிடையில் சிறுமியை தூளியில் கட்டி மலைப்பாதையில் கொண்டுசெல்லும் வீடியோ காட்சி நேற்று வைரலாகி பரபரப்பானது.
The post பென்னாகரம் அருகே மலை கிராமத்தில் பரிதாபம் பாம்பு கடித்த சிறுமியை 8 கிமீ., தூரம் தூளியில் தூக்கிச்சென்றும் இறந்தார் appeared first on Dinakaran.