சிவகங்கை, நவ.29: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம், சாலைகளிலும், பொது இடங்களிலும் ஆதரவின்றி இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களை மீட்டு, இந்த மையத்தில் சிகிச்சை அளித்து, அவர்களின் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழிற் பயிற்சி வழங்குதலாகும்.
இந்த மையத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்தாருடன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் நீண்டகால மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அவரவர் திறனுக்கு ஏற்ப தையல் பயிற்சி, தோட்டக்கலை, சமையல், பூத்தொடுத்தல், காகித பைகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதுதவிர, மாவட்ட மனநல திட்டம் 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டு, காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தால், அரசுடன் இணைந்து, அவர்களை பத்திரமாக மீட்டு, சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்களும் மெற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மனநலம் பாதித்தவர்களை மீட்பு மையத்தில் சேர்க்க பொதுமக்கள் உதவலாம் appeared first on Dinakaran.