- பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டம்
- வேப்பந்தட்டை மாவட்டம்
- ஆத்மா
- வலிகண்டபுரம் ரோவர்
- அறிவியல் மையம்
- நூத்தபூர்
பெரம்பலூர்,நவ.29: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில், அட்மா திட்டத்தின்கீழ், வேளாண்மைத் துறையும், வாலிகண்டபுரம் ரோவர் வேளாண் அறிவியல் மையமும் இணைந்து, வேளாண் அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூட்டாக, நூத்தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெற்குணம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மக்காச்சோள வயல்களை நேரில் ஆய்வு செய்தனர். அப்பொழுது கரிக்கோல் அழுகல் நோய் பாதித்த வயல்கள் ஆய்வு செய்யப் பட்டது. இந்த நோய் பாதிப்பைத் தவிர்த்திட மக்காச்சோள வயல்களில் நல்ல வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், பயிர் சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
அடியுரமாக வேப்பங் கொட்டை புண்ணாக்கை ஏக்கருக்கு 100 கிலோ வரை மண்ணில் இடவேண்டும். மேலும் மக்காச்சோளம் பயிர் செய்த 20 நாட்களில் சூடோமோனாஸ் அல்லது டிவிரிடி ஏக்கருக்கு ஒரு கிலோ விதம், 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இந்தத் தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதால் மக்காச் சோள பயிர்களை கரிக்கோல் அழுகல் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம் என மக்காச்சோளம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது வேப்பந் தட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன், ரோவர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் தோமினிக் மனோஜ், வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
The post மக்காச்சோள வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு: சுழற்சி பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.