மாமல்லபுரம்: பண்டிதமேடு பகுதியில், கார் ஏறி இறங்கிய விபத்தில் பலியான, 5 பெண்களின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி, அஞ்சலி செலுத்தினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மாமல்லபுரம் அடுத்த, பண்டிதமேடு பகுதியில் சாலையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது நேற்று முன்தினம் மதியம் சென்னையில் இருந்து பையனூர் நோக்கி வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஏறி இறங்கியதில் பண்டிதமேடு பாலாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் யசோதா(50), கவுரி(62), லோகம்மாள்(65), ஆந்தாயி(65), விஜயா(65) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா, எஸ்பி சாய்பிரணீத் உடனடியாக நிதியுதவி வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என கூறியதை ஏற்று, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதில், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஜோஷ்வா மீது அதிவேகமாக காரை ஓட்டியது, கவன குறைவாக ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ஜோஷ்வாவை கைது செய்தனர். மேலும், அவருடன் வந்த மூன்று மாணவர்களையும் கைது செய்தனர். இவர்கள், மூவரும் சென்னையில் தனியர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜோஷ்வா சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தி விட்டு காரை ஓட்டினாரா? அல்லது வேறு ஏதேனும் போதை வஸ்துகளை பயன்படுத்தினரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைக்க மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, பிரேத பரிசோதனை முடிந்து நேற்று 11.45 மணிக்கு 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் பண்டிதமேடு பகுதிக்கு போலீஸ் பாதுகாப்போடு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், திருப்போரூர் ஒன்றிய சேர்மன் இதயவர்மன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஒன்றிய துணை பெருந்தலைவர் சத்யா சேகர் ஆகியோருடன் நேரில் வந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது, முதல்வர் அறிவித்த தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி, திமுக, அதிமுக, விசிக, காங்கிரஸ், புதிய புரட்சி கழகம், தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர், நேற்று மாலை 5 பேரின் உடல்கள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு எந்தவித பிரச்னையும் இல்லாமல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் தலைமையில், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் விநாயகம், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதியில் ஒரே தெருவை சேர்ந்த 5 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
* அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி
மாமல்லபுரம் அடுத்த, பண்டிதமேடு பகுதியில் மாடுகளை மேயவிட்டு விட்டு அப்பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சாலையோரம் அமர்ந்திருந்தனர். அவர்கள், மீது கார் ஏறி இறங்கியதில் 5 பேர் பலியாகினர். இதுகுறித்து, முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்து, நேரடியாக சென்று காசோலையை வழங்கி ஆறுதல் கூறிவிட்டு வர உத்தரவிட்டார். காரை ஓட்டி வந்த மாணவர்கள் யாரும் மது அருந்தவில்லை என தெரிகிறது என்றார்.
The post மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் பலியான 5 பெண்களின் உடல்கள் அடக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன், அரசியல் கட்சியினர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.