துரைப்பாக்கம்: சென்னை திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தராஜன். இவர் உடல் எடையை குறைப்பதற்காக (ப்ளிப்கார்ட்) ஆன்லைன் தளத்தில் ஹெர்பல் லைப் பவுடரை சில தினங்களுக்கு முன்பு ஆர்டர் செய்து, இதற்காக ரூ.5600 செலுத்தி உள்ளார். இந்நிலையில், இவர் ஆர்டர் செய்த உடல் எடையை குறைக்கும் ஹெர்பல் லைப் பவுடர் பார்சல் வீட்டிற்கு வந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது, டப்பாவின் மேல் ஹெர்பல் பவுடர் என பிரிண்ட் செய்து இருந்த நிலையில், அதன் உள்ளே கோதுமை மாவு இருந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த வசந்தராஜன் மீண்டும் 2வது முறையாக அதே ஹெர்பல் லைப் பவுடரை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது, முதல்முறை பணத்தை அனுப்பி ஏமாந்ததால் இந்தமுறை ஆர்டர் செய்யும் போது ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, 2வது முறை டெலிவரி செய்யப்பட்ட பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, முன்பு போலவே ஆர்டர் செய்த பவுடருக்கு பதிலாக கோதுமை மாவு இருந்தது.
இதனால், ஆத்திரமடைந்த வசந்தராஜன் டெலிவரி ஊழியரிடம், தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக கோதுமை மாவு வந்துள்ளது. அதனால், நான் பணம் தர முடியாது என மறுத்து, இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார். ஆனால், மறுமுனையில் பேசிய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர், முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வசந்தராஜன் புகார் அளித்துள்ளார். புகார்படி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது இதுபோல் பொருட்கள் மாற்றி அனுப்புவது பல இடங்களில் வாடிக்கையாக நடை பெறுவதால் இதன் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பண இழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post உடல் எடையை குறைக்க ஆன்லைனில் ஆர்டர் செய்தது ஹெர்பல் பவுடர் டெலிவரி வந்தது கோதுமை மாவு: ரூ.5,600 செலுத்திய வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.