×
Saravana Stores

செட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக மதகுகள் வழியாக பிரிந்து செல்லும் தண்ணீர்

கரூர், நவ. 29: கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக வரும் தண்ணீர் மதகுகள் வழியாக பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே அமராவதி ஆற்றின் அணை உள்ளது. இந்த அமராவதி ஆற்றின் மூலம் கரூர், திருப்பூர் மற்றும் கோவை போன்ற 3 மாவட்டங்கள் பாசனவசதி பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த ஆறு அரவக்குறிச்சி அடுத்துள்ள கொத்தம்பாளையம் வழியாக செட்டிப்பாளையம், சுக்காலியூர், கரூர் வழியாக சென்று திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலந்து திருச்சி நோக்கிச்செல்கிறது.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் போது, அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வருவது வழக்கம்.

இதனடிப்படையில், அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 1767 கன அடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 1640 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீருடன் சேர்ந்து, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பெய்யும் மழை போன்றவை இணைந்து ஒருங்கிணைந்த அமராவதி ஆறாக கரூர் செட்டிப்பாளையம் நோக்கி வருகிறது. அவ்வாறு செட்டிப்பாளையம் அணைக்கு வரும் தண்ணீர், பல்வேறு மதகுகளின் வழியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பிரித்து விடப்படுகிறது.

The post செட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக மதகுகள் வழியாக பிரிந்து செல்லும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தொடர் மழை காரணமாக கரூரில் ரெயின் கோட் விற்பனை அமோகம்