சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று 27 நபர்களையும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
நகேந்திரன், சம்பவ செந்தில் (எ) செந்தில்குமரன், அஸ்வத்தாமன், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, அப்பு என்ற விஜய், கோழி என்ற கோகுல், சந்தோஷ், செல்வராஜ், பொற்கொடி, பிரதீப், அரிகரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு, முகிலன், நூர் என்ற விஜய், அப்பு என்ற விஜயகுமார், ராஜேஷ், கோபி, குமாரா, அஞ்சலை, மலர்கொடி ஆகிய 27 பேரில் பெரும்பாலானோருக்கு வழக்கறிஞர்கள் இல்லை. அப்போது, குற்றம்சாட்டபட்ட நாகேந்திரன் கல்லீரல் நோயால் பாதிக்கபட்டுள்ளதாகவும், நீண்ட நேரம் பயனம் செய்யமுடியாது என்பதால், வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றவேண்டும் எனவும், சிறையில் முறையான சிகிச்சை வழங்கவில்லை என்றும் நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜ் ஆஜராகி, இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார். அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரன், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது எனவும், தனக்காக ஆஜராக வரும் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவாதாக நீதிபதியிடம் முறையிட்டார். தொடர்ந்து, 5 ஆயிரம் பக்கத்திற்கும் அதிகமாக குற்றப்பத்திரிக்கை இருப்பதால் டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்க வேண்டும் என குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு முறையீட்டையும் கேட்ட நீதிபதி, அனைவருக்கும் வாதாட வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள குற்றம் சாட்டபட்டவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 12ம் தேதி தள்ளிவைத்தார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்: குற்றப்பத்திரிகையை டிஜிட்டல் முறையில் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.