×

அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தினால் சாலையோர வியாபாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: மேயர் பிரியா எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியபோது, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் பேசுகையில், ‘‘சர்வதேச அளவிலான கேரம் போட்டியில் வடசென்னையை சேர்ந்த மாணவி காசிமா தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் ரூ.1.5 லட்சம் வழங்கினார். அதன் பலனாக இந்த சாதனையை மாணவி பெற்றுள்ளார். எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை படைக்கும் வகையில் அவருக்கு கேரம் பயிற்சி பெற்று வரும் மன்றத்தை சீரமைத்து அவருக்கு கொடுக்கவும், அரசு வேலை மற்றும் சொந்த வீடு வழங்கி தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்’’ என்றார்.

56வது வார்டு திமுக கவுன்சிலர் கமல்: சென்னையில் ரத்த தானம் செய்வதற்காக எனது வார்டில் நிரந்தர இடம் ஏற்படுத்தி தர வேண்டும். நிறைய இளைஞர்கள் ரத்த தானம் செய்ய தயாராக உள்ளனர். அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் உள்ளனர்.
மண்டல குழு தலைவர் மதியழகன்: ரத்த தானம் செய்ய நிரந்தர இடம் இல்லாவிட்டாலும், ரோட்டரி சங்கங்களில் உள்ளது போல் மொபைல் ரத்த தான வாகனங்கள் இருந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.
22வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி: எனது வார்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வார்டு அலுவலகம் இடிக்கப்பட்டது. மீண்டும் கட்டித் தரப்படவில்லை. பார்த்தசாரதி தெருவில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
5வது வார்டு திமுக கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம்: எனது வார்டில் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் 20 அடி அகலம் 400 மீட்டர் அளவில் காலியிடம் உள்ளது. அதில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். விம்கோ மார்க்கெட்டை அதிநவீனமாக மாற்றி தர வேண்டும். எனது பகுதியில் உள்ள பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் கடல் அரிப்பால் சேதமடைந்துள்ளது. அதை சீரமைத்து தர வேண்டும. எர்ணாவூர் மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். மீனவ இளைஞர்களுக்கு கடலோர காவல் படை பயிற்சி அளித்து தற்போது மெரினாவில் 8 பேர் நிரந்தர பணியில் உள்ளனர். தற்போது 100 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். மேலும், எங்களது மண்டலத்தில் செயற்பொறியாளர் ஒருவர் தான் உள்ளார். கூடுதலாக ஒருவரை நியமிக்க வேண்டும்.

15வது வார்டு கவுன்சிலர் நந்தினி: எனது வார்டில் ஒரு சமுதாய நலக்கூடம் வேண்டும். கால்வாய் அமைக்கும் பணிக்காக அங்கிருந்த 229 வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மீண்டும் வீடுகள் தரப்படவில்லை. நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் தற்போது முழு பணமும் கட்டினால் தான் அவர்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பகுதியில் உள்ள சுடுகாட்டில் பணியாளர்கள் இல்லை. இதனால் மிகுந்த சிரமமாக உள்ளது. மலேரியா நோய் ஒழிப்பு பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கிறார்கள். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வேலை செய்ய தயாராக உள்ளனர். ஆனால் சுகாதார அதிகாரி அவர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கிறார்.

மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம்: மணலி மண்டல சுகாதார அதிகாரி, மலேரியா நோய் ஒழிப்பு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கிறார். பிறப்பு சான்றிதழுக்காக 3 மாதம் பொதுமக்கள் அலையும் சூழல் உள்ளது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையர் குமரகுருபரன்: மலேரியா நோய் ஒழிப்பு பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளிப்பது குறித்து விசாரித்து உரிய சுற்றரிக்கை அளிக்கப்படும்.
103வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பலதா: அண்ணா நகர் டவர் பூங்காவில் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். பொதுமக்கள் கோபுரத்தில் நீண்ட நேரம் இருக்கின்றனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற்றவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் பிரியா: பொதுமக்களின் வசதிக்காக அண்ணாநகர் டவர் பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் கோபுரத்தில் இருப்பவர்களை கண்காணிக்க பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன்: தெருவோர கடைகள் அமைப்பதில் சரியான வழிமுறைகளை பின்பற்றப்படவில்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் கடைகள் நடத்த அடையாள அட்டைகளை வழங்கியுள்ளனர். இதை முறைப்படுத்த வேண்டும். அம்மா உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், பொருட்களை எடுத்து செல்வதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் பிரியா: சாலையோர வியாபாரிகள் தங்களது அடையாள அட்டைகளை தவறாக பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும். அதேபோன்று அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தவறுகளை கண்கணிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

* துணை முதல்வர் உதயநிதிக்கு பாஜ கவுன்சிலர் வாழ்த்து
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கின் வெளியே, மகாராஷ்டிரா தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதற்கு, பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த் சக கவுன்சிலர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது உடனடியாக அங்கிருந்த திமுக கவுன்சிலர் சொக்கலிங்கம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நளையொட்டி பாஜ கவுன்சிலர் உமா ஆனந்துக்கு இனிப்பு வழங்கினார். உடனடியாக அவரும், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இப்படி இருதரப்பினரும் மாறி மாறி இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

The post அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தினால் சாலையோர வியாபாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்: மேயர் பிரியா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,CHENNAI ,Chennai Municipal Corporation ,Ribbon Palace ,Deputy Mayor ,Mahesh Kumar ,Commissioner ,Kumaragurupan ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி: தீர்மானம்