×
Saravana Stores

மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கிறது


* வட தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
* 6 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகருகிறது. இது வட தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து, நாளை காலையில் மாமல்லபுரம் அருகே தற்காலிக புயலாக கரையைக் கடக்கும். இதன் காரணமாக வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட்அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு 340 கிமீ தொலைவுக்கு விலகிப் போனது. அதன் பிறகு 390 கிமீ தொலைவுக்கும் இன்னும் தள்ளிப் போனது.

இதன்படி, நேற்று காலை 9 மணி அளவில் வேதாரண்யத்துக்கு 390 கிமீ தொலைவில் நிலை கொண்டு காலை 9 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரமடைந்தது. இந்நிலையில், வட பகுதியில் இருந்து வரும் குளிர் அலைகள் காரணமாக தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்பட்டது. காற்றின் திசை வேகம் காரணமாக அது மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகர தொடங்கியது. குறிப்பாக மணிக்கு 3 கிமீ வேகத்தில் பயணிக்க தொடங்கியது. இது நேற்று மதிய நிலவரப்படி இலங்கை- திரிகோண மலைக்கு கிழக்கு- வட கிழக்கே 110 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 480 கிமீ தொலைவிலும்நிலை கொண்டு இருந்தது.

இந்நிலையில், பின்னர் அது வடக்கு – வட மேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதியை ஒட்டி நகர தொடங்கியது. இப்படி கிழக்கு, வடக்கு, வட மேற்கு திசையில் அங்கும் இங்கும் போக்குக் காட்டி மெல்ல வலுவிழக்க தொடங்கியது. தொடர்ந்து, மேலும் வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக- புதுச்சேரி கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்தது. பின்னர் நேற்று மாலையில் தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்தது. அதுமுதல் இன்று (29ம்தேதி) காலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் தற்காலிகமான புயலாக வலுப்பெறும். அதற்குப் பிறகு வலுக்குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பொதுவாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதற்கு வளி மண்டலத்தின் கீழ் பகுதியில் காற்று குவிதல், மேல் பகுதியில் காற்று விரிவடைதல் போன்ற பல்வேறு நிகழ்வின் காரணமாக புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக 26 மற்றும் 27ம் தேதிகளில் நல்ல காற்றின் பகுதி வளி மண்டல கீழ்ப்பகுதியில் காற்று குவிவதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் (27ம் தேதி) முதல் காற்று குவிதல் என்பது குறைந்துள்ளது. 28ம் தேதி (நேற்று) வளி மண்டல மேலடுக்கில் காற்று விரிவடைவது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் காற்றின் திசை மாறுதல் மற்றும் காற்றின் வேகம் மாறக்கூடிய பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியில் சாதகமாக இருக்கிறது. அதனால் நிலப் பகுதியை ஒட்டி அதிகமாக இருப்பதால், மேகக் கூட்டங்கள் உருவாவது குறைந்துள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு 27ம் தேதியில் 13 கிமீ வேகத்தில் இருந்தது. புயல் நகரும் போது இதுபோல வேகம் குறைந்ததால் 27ம் தேதியில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கில் இருந்து மேற்காக நகர்ந்து செல்லும் வெப்ப அலையுடனும், மேற்கில் இருந்து கிழக்காக வீசும் காற்று மற்றும் இலங்கைக்கு அருகில் இருக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலத்தை நோக்கி செல்லக்கூடிய காற்றின் போக்கு, நிலப்பகுதியுடன் உராய்வு ஏற்படுவதால் உண்டான மாற்றங்கள் ஒருபுறத்திலும், மேலும், வட திசையில் அது நகர முடியாத அளவுக்கு இரண்டு எதிரெதிர் திசையில் காற்றின் போக்கு இருந்த காரணத்தால் நகர்வின் வேகம் குறைந்து இருந்தது. இதபோன்ற காரணங்களால் புயலாக வலுப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அது தற்போது தற்காலிக புயலாக மாறி கரையைக் கடக்க உள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். குறிப்பாக இன்று (29ம்தேதி) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும். அதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவங்கங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் அங்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

மேலும், 30ம் தேதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்பதால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் 4ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

The post மெதுவாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மாமல்லபுரம் அருகே நாளை கரையை கடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,North Tamil Nadu ,Delta districts ,Chennai ,Bay of Bengal ,
× RELATED சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு...