×
Saravana Stores

ஏன்? எதற்கு? எப்படி?

?நமக்கு வரும் வருமான பணத்தில் முதலில் எந்த பொருள் வாங்கினால் பணம் பல மடங்காகும்?
– பொன்விழி, அன்னூர்.

தங்கம் வாங்க வேண்டும், வெள்ளி வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாகச் சொன்னாலும், முதலில் வாங்க வேண்டிய பொருள் என்பது “கல்உப்பு’’தான். நம்முடைய சுயசம்பாத்ய பணத்தில் முதன்முதலாக ஒரு பத்து ரூபாய்க்காவது உப்பினை வாங்கி வைத்துவிட வேண்டும். உப்பு என்பது மஹாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுவதால்தான், அந்நாட்களில் வெள்ளி தோறும் வீடுகளில் உப்பு வாங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.அவ்வாறு உப்பினை வாங்கி வைத்தால், வருமானம் பல மடங்கு பெருகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?திருக்கோயிலில் இறைவனை வழிபட ஏற்ற நேரம் எது?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

இறைவனை வழிபடுவதற்கு கால நேரம் ஏது? சந்நதி திறந்திருக்கும் பட்சத்தில் எல்லா நேரத்திலும் இறைவனை வழிபடலாம். ஆறுகால பூஜைகளின் போது நடைபெறும் தீபாராதனை காலத்தில் ஒளி வெள்ளத்தில் இறைவனை வழிபடும்போது மனதில் உற்சாகம் என்பது பீறிட்டு எழுகிறது. அந்த நேரத்தில் ஆண்டவனைக் காணும்போது உடல் சிலிர்க்கிறது, உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. அதனால்தான் நம்மில் பலரும் அந்த தீபாராதனைக்கு முக்கியத்துவம் தந்து அந்தநேரத்தில் மெய்மறந்து நம் இருகரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி வணங்குகிறோம். எல்லா நேரத்திலும் இறைவனை வழிபடலாம் என்றாலும், தீபாராதனை நேரத்தில் வழிபடுவது என்பது மனதை செம்மை ஆக்குகிறது என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

?கோயிலுக்குள் நுழையும்போது முதலில் எந்த இறைவனை வணங்க வேண்டும், கடைசியாக எந்த இறைவனை வணங்க வேண்டும்?
– வண்ணை கணேசன், சென்னை.

இது அந்த ஆலயத்தின் ஆகம விதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். சிவாலயம் என்று வரும்போது முதலில் வாயிலில் உள்ள நந்தியம்பெருமானை வணங்கி அவரிடம் அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைய வேண்டும். ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் முழுமுதற் கடவுள் ஆகிய விநாயகப் பெருமானை முதலில் வணங்க வேண்டும் என்றும், ஆலய தரிசனத்தை பூர்த்தி செய்யும்போது ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்க வேண்டும் என்றும் சொல்வார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக, அத்யாந்த ஸ்வாமி என்ற வழிபாடு உண்டு. அதாவது ஆதி அந்த ஸ்வாமி என்று பிரித்து பொருள் காணலாம். ஆதி என்றால் துவக்கம், அந்தம் என்றால் இறுதி, துவக்கத்தில் விநாயகரையும் இறுதியில் ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இந்த இரண்டு உருவங்களையும் இணைத்து அத்யாந்த ஸ்வாமி என்ற பெயரில் ஒரு சிற்பத்தை சில ஆலயங்களில் தரிசிக்க இயலும்.

?பெண்கள் ஆள்காட்டி விரலால் குங்குமம் வைப்பதை விட்டு, மோதிரவிரலால் குங்குமம் வைத்துக் கொள்வது சரியா?
– ஜான்சாமுவேல், மும்பை.

சரியே. ஆண்களாக இருந்தாலும் பெண்
களாக இருந்தாலும் எல்லோருமே மோதிரவிரலால்தான் நெற்றியில் திலகத்தினை வைத்துக் கொள்ள வேண்டும். மோதிர விரலுக்கு “அநாமிகா’’ என்று பெயர். அந்த மோதிர விரலால் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளும்போது இந்த நான் என்கிற அகம்பாவம் அழிந்து ஞானம் பிறக்கிறது என்பதே இதற்கான தாத்பரியம்.

?கோயிலுக்குச் சென்று சாமியை கும்பிட்டுவிட்டு எத்தனை முறை சுற்றி வர வேண்டும்?
– டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

ஒருமுறை சுற்றி வந்தாலும் இறைவனின்பால் தனது சிந்தையைச் செலுத்தி முழுமையான ஈடுபாட்டுடன் சுற்றி வந்து வணங்க வேண்டும். மூன்று முறை சுற்றி வந்து வணங்குதல் என்பது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

?திருமணம் நடைபெறுவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் முகூர்த்தக்கால் நடவேண்டும்?
– எம்.மனோகரன், ராமநாதபுரம்.

குறைந்த பட்சமாக மூன்றுநாட்களுக்கு முன்னர் நடவேண்டும். இதனை மூன்றாம் கால் என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு ஞாயிறு அன்று திருமணம் நடைபெற உள்ளது என்று சொன்னால், வெள்ளி அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாக முகூர்த்தக் கால் நடவேண்டும். வெள்ளி அன்று அதிகாலை முகூர்த்தக்காலை நட்டுவிட்டு அதிலிருந்து வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்றாவது நாளில் திருமணம் நடக் கிறது என்ற கணக்கில் இதனை மூன்றாம் கால் என்று குறிப்பிடுவார்கள். அதற்கு முன்னதாக வரும் புதன்கிழமை அன்று நட்டால், அதனை ஐந்தாம் கால் என்றும், திங்கள் அன்று நட்டால் அதனை ஏழாம் கால் என்றும், குறிப்பிடுவார்கள். கால் நடுவது என்பது மூன்றாம் கால், ஐந்தாம் கால், ஏழாம் கால் என்று ஒற்றைப்படை நாட்களில் நடவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்வார்கள். அதிகபட்சமாக ஒரு பட்சம் என்று சொல்லப்படும் 15 நாட்களுக்கு முன்னதாக முகூர்த்தகால் நட்டுவிடலாம். அதற்கு முன்னதாக கால் நடக்கூடாது. வீட்டிலே முகூர்த்தக்கால் நட்டுவிட்டால் அந்த மணமகனோ அல்லது மணமகளோ வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படியே சென்றாலும் ஆறு, ஓடை, கால்வாய் போன்ற தீர்த்தங்களை தாண்டிச் செல்லக்கூடாது. வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்கள், உறவினர் இல்லங்களுக்குச் செல்ல நேர்ந்தாலும், அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பிவிட வேண்டும். முகூர்த்தக் கால் நட்ட நாளில் இருந்து முகூர்த்தம் நல்லபடியாக நடந்தேறும் நாள் வரை காலை மாலை இருவேளையும் மணமக்களுக்கு நலங்கிட்டு வரவேண்டும். இந்த விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

?வெள்ளி நவரத்தின மோதிரம் எந்த விரலில் அணிய வேண்டும்?
– கு.து.லிங்கமணி,மார்த்தாண்டன்பட்டி.

எந்த மோதிரம் ஆக இருந்தாலும், வலதுகரத்தின் மோதிர விரலில்தான் அணிய வேண்டும். வலதுகரத்தின் மோதிரவிரலில் ஏற்கெனவே ஒரு மோதிரம் இருக்கும் பட்சத்தில் தவிர்க்க இயலாத சூழலில் ஒரு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடுவிரலிலும் அணிந்துகொள்ளலாம். ஆனால், நடுவிரலில் அணிந்து கொள்ளும் மோதிரத்தில் ரத்தினங்கள் ஏதும் இருக்கக்கூடாது.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Tags : Ponvizhi ,Annur ,Dinakaran ,
× RELATED 3 பேர் மீது குண்டாஸ்