×
Saravana Stores

அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த பெண் தொழிலதிபர் கொடூரக் கொலை: டேட்டிங் ஆப் நண்பர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் உடற்பயிற்சி செய்யும் டம்பில்சால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டேட்டிங் ஆப் நண்பர், பெண் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சி ஆபிரகாம் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கணவனை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். ஜெய்சியின் ஒரே மகள் துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தினமும் தாயும், மகளும் போனில் பேசிக்கொள்வது வழக்கம்.

அதன்படி கடந்த 17ம் தேதி ஜெய்சிக்கு அவரது மகள் வழக்கம்போல் போன் செய்துள்ளார். ஆனால் பலமுறை அழைத்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் களமசேரி போலீசுக்கு போன் செய்து விவரத்தைக் கூறினார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜெய்சி கழிப்பறையில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பரிசோதித்தனர். அதில் ஒருவர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த படி அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவதும், ஹெல்மெட்டை கழட்டாமலேயே அவர் ஜெய்சியின் பிளாட்டுக்கு செல்வதும் பதிவாகி இருந்தது.

ஆகவே அவர் தான் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் தொடர்ந்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜெய்சியிக்கும், கொச்சி திருக்காக்கரை பகுதியை சேர்ந்த கிரீஷ்பாபு (45) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் கிரீஷ்பாபு தான் பணத்திற்காக ஜெய்சியை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜெய்சியும், கிரீஷ்பாபுவும் டேட்டிங் ஆப் மூலம் நண்பர்கள் ஆகி உள்ளனர். அடிக்கடி 2 பேரும் சந்தித்து வந்து உள்ளனர். ஜெய்சிக்கு கொச்சி எரூர் பகுதியை சேர்ந்த கதீஜா (43) என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்தது.

பின்னர் கதீஜாவுடன் கிரீஷ்பாபுவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்தநிலையில் ஒரு நிலத்தை விற்ற வகையில் ஜெய்சிக்கு சமீபத்தில் ரூ.30 லட்சம் கிடைத்தது. அதை கொள்ளையடிக்க கிரீஷ்பாபுவும், கதீஜாவும் சேர்ந்து திட்டம் தீட்டினர். அதன்படி கடந்த 17ம் தேதி ஜெய்சியின் பிளாட்டுக்கு சென்ற கிரீஷ்பாபு அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் போதையில் இருந்த ஜெய்சியை கிரீஷ்பாபு, தான் கொண்டு வந்திருந்த டம்பில்சால் தலையில் பலமாக அடித்துள்ளார். இது தவிர தலையணையால் அவரது முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளார். அதன் பிறகு உடலை குளியலறையில் கொண்டு போட்டுள்ளார். ரூ. 30 லட்சத்தை ஜெய்சி, வீட்டில் தான் வைத்திருப்பார் என்று கருதி உள்ளார்.

ஆகவே கொலைக்கு பிறகு கிரீஷ்பாபு வீட்டில் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் பணம் கிடைக்கவில்லை. கடைசியாக ஜெய்சி அணிந்திருந்த 2 வளையல்கள், 2 செல்போன்களை எடுத்துவிட்டு கிரீஷ்பாபு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தான் போலீசிடம் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொலைக்காக பலமுறை ஒத்திகை பார்த்து உள்ளார். கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருப்பதற்காக மிகவும் கவனமாகவே கொலை திட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார். கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக போலீசார் கருதுவார்கள் என்று தான் ஜெய்சியின் உடலை அங்கு கொண்டு போட்டுள்ளார். இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த கதீஜாவையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு 2 பேரையும் போலீசார் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்த பெண் தொழிலதிபர் கொடூரக் கொலை: டேட்டிங் ஆப் நண்பர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kochi, Kerala ,
× RELATED நயன்தாராவை போலவே எனக்கும் நெருக்கடி: பார்வதி பகீர் தகவல்