×
Saravana Stores

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது!

சென்னை: அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; அரசுப் பள்ளிகளில் 2024-2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்ளுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு” 25.01.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டில் ரூ.10,000/- (ஒரு மாதத்திற்கு ரூ.1000/- என) வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். முதல் தாள் காலை 10.00மணி முதல் 12.00 மணி வரையிலும் இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரையிலும் நடைபெறும்.

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை 30.11.2024 முதல் 09.12.2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து 09.12.2024 க்குள் மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Chief Minister Aptitude Test ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக...