நாமக்கல், நவ.28: நாமக்கல்லில் நடுரோட்டில் அல்லாடும் பயணிகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு, திருச்சி ரோட்டில் முக்கோண பாதை அமைத்து, வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் முதலைப்பட்டியில், கடந்த 10ம் தேதி முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. திருச்சி மற்றும் துறையூர் பஸ்கள், திருச்சி ரோட்டில் உள்ள பயணியர் விடுதி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று, பயணிகளை இறக்கி விட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று வருகின்றன. பஸ்சில் இருந்து இறங்கும் பொதுமக்கள், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு செல்வதற்கு வசதியாக, திருச்சி ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரை அகற்றி, அதிகாரிகள் வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த வழியில் நடந்து செல்வது ஆபத்தாக மாறியது. இதனால் அகற்றப்பட்ட தடுப்பு சுவர் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பதிலாக, திருச்சி ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு, புதிய பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை பஸ் நிறுத்தத்தின் பின்னால் இருப்பதால், இதை பொதுமக்கள் கவனிக்காமல் அடைக்கப்பட்ட தடுப்பு சுவரின் மீது ஏறி குதித்து, திருச்சி ரோட்டை கடந்து, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று வந்தனர்.
போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரங்களில், பொதுமக்கள் தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து, சாலையை கடப்பது ஆபத்தான பயணமாக மாறியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருச்சி ரோட்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டுக்கு மக்கள் எளிதாக செல்ல மாற்று ஏற்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். கோட்ட பொறியாளர் திருகுணா,நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் கைலாசம், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மாநகராட்சி பொறியாளர் சண்முகம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று காலை திருச்சி ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, சேந்தமங்கலம் செல்லும் பிரிவு சாலை ஆகிய இடங்களில் சாலையின் அமைப்பை ஆய்வு செய்தனர்.
பின்னர், திருச்சி ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து, பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில், முக்கோண பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று மாலை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போக்குவரத்து போலீசாரின் ஆலோசனைப்படி, திருச்சி ரோடு வளைவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றி, முக்கோண வடிவில் ஒரு புதிய பாதையை அமைத்தனர். இந்த பாதை வழியாக பயணிக்கும் மக்கள், ஒரு நிமிடம் நின்று எதிர்புற சாலையை கவனித்து கடக்கும் வகையில், புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘திருச்சி ரோடு பஸ் நிறுத்தத்தில், பஸ்சில் இருந்து இறங்கி வரும் பயணிகள், இந்த முக்கோண பாதை வழியாக, சிரமம் இன்றி சாலையை கடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க முடியும். எனவே, மக்கள் தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்காமல், இந்த முக்கோண பாதை வழியாக நிதானமாக சாலையை கடந்து செல்ல வேண்டும்,’ என்றனர்.
அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்த பின்னர், நாமக்கல் மாநகரில் 6 இடங்களில் புதிய பஸ் நிறுத்தங்கள், பயணிகள் நிழற்கூடங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் மக்களுக்கு எந்த மாதிரி பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்பிரிவு அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து புதிய, புதிய மாற்றங்களை நகரில் மேற்கொண்டு வருகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று விட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றால் டைமிங் பிரச்னை ஏற்படும். இதனால் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்களை இயக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறிவிட்டதால், மக்கள் சிரமமின்றி பஸ் பயணம் மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
The post பாதுகாப்பாக சாலையை கடக்க முக்கோண பாதை appeared first on Dinakaran.