×
Saravana Stores

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிசி, எம்பிசி மாணவர்களுக்கு ₹2 லட்சம் வரை உதவித்தொகை

அரியலூர், நவ. 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ; தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ மற்றும் மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம்; ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2024-2025 ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் 2024-2025ம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal applications) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் விண்ணப்பங்களை டிசம்பர் 15 க்குள் மற்றும் புதியது விண்ணப்பங்களை 15.01.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் பிசி, எம்பிசி மாணவர்களுக்கு ₹2 லட்சம் வரை உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : MBC ,Ariyalur ,District ,Collector ,Rathanasamy ,Tamil Nadu ,IIT IIT ,IIM ,IIIT ,NIT ,Central Universities ,
× RELATED பிசி, எம்பிசி மக்களுக்கு வழங்கப்பட்ட...