×
Saravana Stores

பூந்தமல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்படும் 30 அடி உயர தூணின் கம்பிகள் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு: 2 ராட்சத கிரேன் மூலம் ஊழியர்கள் சரிசெய்தனர்

பூந்தமல்லி, நவ. 28: பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வரும் 30 அடி உயர தூணின் கம்பிகள் பாரம் தாங்காமல் சாய்ந்தால் பரப்பு ஏற்பட்டது. அவற்றை 2 ராட்சத கிரேன் மூலம் ஊழியர்கள் சரி செய்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி ரூ.63,246 கோடி செலவில் 118.9 கிலோமீட்டர் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி தற்போது நடந்து வருகிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி மாதவரம்-சிறுசேரி வரை (45.4 கி.மீ) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழித்தடங்களில் தற்போது, பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 4ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அதில் ஒரு தூணில் கீழே இருந்து மேலும் தூணை உயர்த்துவதற்காக 30 அடி உயரத்தில் இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு வருகிறது. நேற்று திடீரென தூணின் மேலிருந்த கட்டுமான கம்பிகள் காற்றின் வேகத்தாலும் உயரம் மற்றும் பாரம் தாங்காமலும் அப்படியே ஒரு பகுதியில் சாய்ந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மெட்ரோ ரயில் கட்டுமான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 2 ராட்சத கிரேன் மூலம் சரிந்த நிலையில் இருந்த கம்பிகளை தூக்கி நிறுத்தினர். மேலும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை ஏதும் செய்யாமல் தொடர்ந்து வாகனங்கள் சென்றன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது பல்வேறு சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post பூந்தமல்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்படும் 30 அடி உயர தூணின் கம்பிகள் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு: 2 ராட்சத கிரேன் மூலம் ஊழியர்கள் சரிசெய்தனர் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Chennai… ,Dinakaran ,
× RELATED தொழிலாளிக்கு கத்திக்குத்து