×
Saravana Stores

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறை – நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி செலவில் 8 வகுப்பறைகள், சிறிய நூலகம், சிறிய ஆய்வக கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்கள்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (27.11.2024) செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.1.22 கோடி செலவில் மெட்ராஸ் ரவுண் டேபிள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம், சிறிய நூலகம், சிறிய ஆய்வு கட்டிடம் ஆகியவற்றினை திறந்து வைத்தார்கள்.
பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ரூ.1.22 கோடி செலவில், புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம், சிறிய நூலகம், சிறிய ஆய்வ கட்டிடம் திறந்து வைத்தல்; தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான திட்டங்கள் இன்றைக்கு பயன்பாட்டிற்கு வந்து, பள்ளிக் கல்வித்துறை, இந்திய அளவில் முதன்மை இடத்தில் இருந்து வருவதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண், பேராசிரியர் பள்ளிக்கல்வி மேம்பாட்டுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்து பள்ளிக்கல்வித்துறை இன்றைக்கு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களின் பெயரால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற ரூ.7,500 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கி, அமைச்சர் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதைப்போல 7,300 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.1,500 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றாலும் தன்னார்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும் இணைந்து “நமக்கு நாமே” என்கின்ற ஒரு திட்டத்தின் மூலம் அவர்களுடைய பங்களிப்போடு புதிய கட்டிடங்களை கட்டும் பணிகள் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலும் எல்லா துறைகளிலும் நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கல்வி துறையில் அதிக அளவில் தன்னார்வலர்களையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை பள்ளிக் கல்விதுறை அமைச்சர் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் மேடவாக்கத்தில் இருக்கின்ற இந்த அரசுபள்ளியில் ரூ.1.22 கோடி செலவில் எட்டு வகுப்பறைகளும், ஒரு நூலகமும் கொண்ட ஒரு கட்டிடம் ஒன்று, ரூ.80 இலட்சம் செலவில் மெட்ராஸ் ரவுண் டேபிள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் தந்து மீதம் இருக்கின்ற ரூ.42 இலட்சம் அரசு தந்து கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை ஒட்டி இது ஒரு அரசு நிகழ்வாகவும், இக்கட்டிடத்தை திறந்து வைத்து மகிழ்ச்சி அடையும் நாளாகவும் இது இருந்து வருகிறது.

பருவமழை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று முன்தினம் கூட அரசு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது என சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக சென்னையைப் பொருத்தவரை அக்டோபர் மாதம் 14ஆம் தேதி பெய்யத் தொடங்கிய வடகிழக்கு பருவமழைக்காகவே, சென்னையின் பல்வேறு இடங்களில் ஏறத்தாழ 1800க்கும் மேற்பட்ட 100HP போன்ற பல்வேறு மோட்டார்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் வரை அந்த மோட்டார்கள் எதுவும் எடுக்க வேண்டாம், அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்த வகையில் 2 செ.மீ., 3 செ.மீ., என்று பெய்கின்ற மழை கடந்த வாரம் ஒரே நாளில் பெருங்குடியில் 8 செ.மீ. அளவுக்கு கூட பெய்தது. உடனடியாக எங்கேயும் தண்ணீர் நிற்காத வகையில் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. அந்த வகையில் இன்று புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேளச்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு 1.60 மில்லியன் கன அடி அளவிற்கு நீர்நிலைகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் 160 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 4.60 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் தேக்கும் அளவிற்கு நான்கு நீர்நிலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் பள்ளிக்கரணையில் ஏற்கெனவே ஏறத்தாழ 13 ஏரிகளிலிருந்து வருகின்ற உபரி நீர் நாராயபுரம் ஏரிக்கு வந்து அங்கிருந்து சதுப்பு நிலங்களிலிருந்து ஒக்கியம் மடுவிற்கு சென்று அங்கிருந்து கடலுக்கு செல்லும். குறிப்பாக நாராயபுரம் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் என்பது 1000 கன அடி அளவிற்கு மட்டுமே நீர்வழிப்பாதை இருந்தது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் இரண்டு முறை ஆய்விற்கு வந்து கூடுதலாக அந்த இடத்தில் 1000 கனஅடி அளவிற்கு நீர் வெளியேறும் நீர்வழிப்பாதை கண்டறிந்து அந்த கரையை பலப்படுத்திட வேண்டும் என்று ஆணையிட்டு அந்தவகையில் நீர்வளத்துறை கரையை பலப்படுத்துவதற்குரிய பணியினை செய்து வருகிறார்கள்.

அப்பகுதியில் நான்கு கோவில்கள் கட்டப்பட்டிருந்தது. அப்பகுதி சம்மந்தப்பட்ட பொதுமக்களின் இசைவுடன் கோவில்கள் அகற்றப்பட்டு கரையை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை ஒரு மண்டலத்திற்கு ஒரு IAS அலுவலர் நோடல் அலுவலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா பகுதியில் 2 அல்லது 3 நாட்களுக்கு மழை இருக்கும் சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள், இப்படி தமிழ்நாடு முழுவதும் டெல்டா பகுதிகளாக இருந்தாலும், சென்னைப் பகுதியாக இருந்தாலும் மழை வெள்ளம் பாதிப்புகள் இல்லாத வகையில் மக்களைக் காப்பதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், மெட்ராஸ் ரவுண் டேபிள் நிர்வாகிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

The post நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Minister of Medicine and Public Welfare ,Subramanian ,Minister ,School Education ,
× RELATED வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம்...