சென்னை: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று உருவாக இருக்கும் புயலுக்கு ‘பெங்கல்’ என்று பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மேலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேகமாக நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.