×
Saravana Stores

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை


சென்னை: தமிழ்நாடு சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில்தான் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவர்களாகவும், வேலைக்குச் செல்பவர்களாகவும், சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் – அதாவது 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணை பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அதேபோல ‘ப்ராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம், ‘இமைகள் திட்டம்’ ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 அளவிலும் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. அதனால்தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Minister ,Geethajeevan ,Chennai ,Social Welfare-Women's Rights ,
× RELATED அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு...