சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் இன்று வெளியிட்ட அறிக்கை: இந்திய ஜனநாயக நாட்டில் மதவாதமும் வகுப்பு வாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகள் இவற்றில் முதலிடம் பிடிக்கின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்கள் போடுவதும் சட்டங்கள் இயற்றுவதுமென வரம்பு மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஒன்றிய அரசும் இதில் முனைப்பு காட்டுகிறது.
இதே பாணியில் உத்தரப் பிரதேசம் சம்பலில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஜமா மஸ்ஜிதை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்தப் பள்ளிவாசல் இதற்கு முன்பாக கோவிலாக இருந்தது என்றும் அதை இடித்து விட்டுத்தான் பள்ளிவாசல் கட்டப்பட்டது எனக் கூறி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்றம் பள்ளிவாசலை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் ஆய்விற்காக செல்லும் போது அப்பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
இதில் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் அநியாயங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கவே இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதாவே நாம் கருத வேண்டியுள்ளது. காவல் துறை நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என மறுத்தாலும் மக்கள் அதை நம்புவதாக இல்லை. இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய செயல்கள் தொடர்ந்தால் தேசம் தழுவிய மிகப்பெரும் ஜனநாயகப் போராட்டங்களை முஸ்லிம்கள் முன்னெடுப்பார்கள். உடனடியாக உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு வழிபாட்டுத்தல பாதுகாப்பு சட்டத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post முஸ்லிம்கள் மீதான அடக்கு முறை தொடர்ந்தால் தேசம் தழுவிய மிகப்பெரும் ஜனநாயக போராட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு appeared first on Dinakaran.