தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகள்: போக்குவரத்து துறை சாதனைகளுக்கு ஒன்றிய அரசின் விருதுகளே சான்று; 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல்; 570.86 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பயணம்: தமிழக அரசு தகவல்

தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு பெற்றுள்ளதே திராவிட மாடல் ஆட்சியின் போக்குவரத்துத்துறை சாதனைகளுக்கு சிறந்த சான்று என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 2021ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மகளிர் முன்னேற்றத்திற்காகப் புரட்சிகரமான பல திட்டங்களை தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். அவற்றுள் முதன்மையான திட்டம் – முதன்முதல் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மகளிர் விடியல் பயணத் திட்டம். இதன் மூலம், ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திரச் செலவில் சுமார் ரூ.888 சேமிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மாபெரும் திட்டத்தில் கடந்த அக்.31ம் தேதி வரையில் 570.86 கோடி பயண நடைகள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளில் 57.07 லட்சம் மகளிர் பயணம் மேற்கொள்கின்றனர்.

399 புதிய வழித்தடங்களில் 725 பேருந்துகள் புதிய வழித்தடங்களிலும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் நிறுத்தப்பட்ட 519 வழித்தடங்களில், 638 பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகள் விரைவாகப் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 56 இணைப்புச் சிற்றுந்துகள், சென்னையில் 30 மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.2021க்குப் பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதில், கடந்த அக்.31ம் தேதி வரை 2,578 புதிய பேருந்துகள் வரப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது, எஞ்சிய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்புக் கேமரா, இருக்கைகளில் அவசர அழைப்பு பொத்தான் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 2,500 மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் வருகின்றன. தற்போது 2,330 பேருந்துகள் மற்றும் பணிமனைகள், பேருந்து நிலையங்கள் என மொத்தமாக 63 இடங்களில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதற்கு வசதியாக பெண்களுக்கென தனியே 4 இருக்கைகள் ஒதுக்கப்பட்டு 2023 மே 8ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

www.tnstc.in மூலமும், டிஎன்எஸ்டிசி செயலியின் மூலமும் நாளொன்றிற்கு சராசரியாக 18,195 பயணச்சீட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. வார நாட்களில் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்ய ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அதிர்ஷ்டசாலி பயணிகளை ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, முதல் மூன்று அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.10,000 பரிசும், அடுத்த 10 பயணிகளுக்கு ரூ.2,000 பரிசு தொகையும் மொத்தமாக ரூ.50,000 பரிசு வழங்கப்படுகிறது. இது பயணிகளிடையே போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நீண்ட தூரப் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் முறையை ஊக்குவிக்கிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகைப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆணைகள் பிறப்பித்துள்ள நிலையில், இதுவரை 3,959 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நியமிக்கவும், 537 தொழில்நுட்பப் பணியாளர்களை நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டு, அதில் 684 ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நியமிக்கப்பட்டு, மீதம் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2

022-23ம் ஆண்டிற்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல்திறன்களுக்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு 17 விருதுகளை வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவை அனைத்துப் பிரிவு மக்களாலும் பாராட்டப்படுகிறது.

அரசுப் பேருந்து போக்குவரத்துகளில் தமிழ்நாடு போக்குவரத்து இந்திய அளவில் சிறந்த போக்குவரத்து நிறுவனமாகப் பாராட்டப்பட்டு, தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு பெற்றுள்ளதே சிறந்த சான்றாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

The post தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25% விருதுகள்: போக்குவரத்து துறை சாதனைகளுக்கு ஒன்றிய அரசின் விருதுகளே சான்று; 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல்; 570.86 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பயணம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: