- வந்தலூர் உயிரியல் பூங்கா
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வனத்துறை?: பொது
- சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் முகாமில் கலந்துகொண்ட கால்நடை மருத்துவர் வல்லையப்பனிடம் ஒப்படைத்தார். சுமார் 10 மாதங்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனத்துறையினர் கடந்த மாதம் 26ம் தேதி குரங்கு குட்டியை வாங்கிச் சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்த்துள்ளனர்.
அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால் குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வல்லையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குரங்கு குட்டிக்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உரிய சிகிச்சையும், சிறந்த உணவும் அளிக்கப்பட்டு வருவதாக கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது என்று மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், குரங்கு குட்டி, கடந்த 20ம் தேதி மரணமடைந்து விட்டது. இதையடுத்து வல்லையப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு, குரங்கு குட்டி மரணம் தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது. அப்போது, நவம்பர் 14ம் தேதி ஆரோக்கியமாக இருந்ததாக கூறப்பட்ட குரங்கு குட்டி எப்படி இறந்தது. எந்த தொற்றும் பாதிக்காத வகையில் 10 மாதங்கள் மனுதாரர் சிகிச்சை அளித்த நிலையில், வண்டலூர் பூங்காவில் சேர்க்கப்பட்ட 27 நாட்களில் அது இறந்திருக்கிறது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை வரும் 28ம் தேதி தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.