×
Saravana Stores

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (நவ.23) காலை 8.30 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 25ம் தேதி அன்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகிற 27ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளைய தினம் (நவ.25) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 26ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Bay of Bengal ,Chennai Meteorological Department ,South Andaman Sea ,Southeast Bay of Bengal ,
× RELATED தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்!!