டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்: அமைச்சர் பி.மூர்த்தி திட்டவட்டம்

மேலூர்: டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கமாட்டோம் என்று அமைச்சர் பி.மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த நவ.7ல் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதித்திருக்கிறது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம் முற்றிலும் நாசமாகும். பெரியாறு பாசனத்தில் பயன்பெறும் வேளாண் நிலங்கள் வேளாண்மைக்கு பயன்படாமல் தரிசு நிலங்களாகும். டங்ஸ்டன் சுரங்க பகுதியில் தமிழ் வரலாற்றை பறை சாற்றும் தமிழி எழுத்துக்கள் கொண்ட புகழ் பெற்ற மாங்குளம் கல்வெட்டு, சமணப் படுகைகள், பாண்டியர் கால குடைவரைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகியவையும் அமைந்துள்ளன. அழகர்கோவில் காப்பு காடுகளும் நூற்றுக்கணக்கான ஏரி, குளம், குட்டைகளும் அமைந்துள்ளன. இவை அனைத்தும் சுரங்க நடவடிக்கையால் பாழ்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. குறிப்பாக மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், சுரங்க திட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அரிட்டாபட்டியில் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று, கிராம மக்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசு அரிட்டாபட்டியை சுற்றி 5ஆயிரம் ஏக்கரை டங்ஸ்டன் சுரங்கத்திற்காக எடுப்பதாக கூறியுள்ளனர். இதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காது. இப்பகுதிலிருந்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்த மனு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரிட்டாபட்டி பகுதி ஏற்கனவே பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணப் படுகைகள் உள்ளது. கிடாரிப்பட்டி பகுதியில் அழகர்கோவில் மலை உள்ளது. எனவே, இந்த பகுதி அதற்கு உகந்தது அல்ல என அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க உள்ளது. ஒன்றிய அரசு ஆய்வுக்கு என்று இந்த பகுதிக்கு வருவதற்கு கூட தமிழக அரசு அனுமதிக்காது. ஆரம்ப நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அவர்கள் வந்து ஆய்வு செய்து, கட்டிடம் கட்ட இயலாது. இதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டார்கள், அரசும் அனுமதிக்காது’ என்று தெரிவித்து உள்ளார்.

The post டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்: அமைச்சர் பி.மூர்த்தி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: