இந்துார்: உள்நாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரான, சையத் முஸ்டாக் அலி டி20 போட்டியில் நேற்று, திரிபுராவை, தமிழ்நாடு அணி அபாரமாக வெற்றி பெற்றது. சையத் முஸ்டாக் அலி டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு மாநில அணிகள் இடையில் நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி. நாட்டின் முக்கிய நகரங்களில் இப்போட்டிகள் நேற்று துவங்கின. மத்தியப்பிரதேசத்தின் இந்துார் நகரில் நேற்று நடந்த ஒரு போட்டியில் தமிழ்நாடு – திரிபுரா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அதிரடியாக ஆடி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.
தமிழ்நாடு அணியின் பாபா இந்திரஜித், 39 பந்துகளில் 78, நாராயண் ஜெகதீசன் 30 பந்துகளில் 50, கேப்டன் ஷாருக்கான் 18 பந்துகளில் 31, முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் 17 பந்துகளில் 38 ரன்களை விளாசினர். திரிபுரா பந்து வீச்சாளர்கள் மணி ஷங்கர் சிங், அஜய் சர்க்கார் தலா 2 விக்கெட் எடுத்தனர். வெற்றி பெற 235 ரன் இலக்குடன் திரிபுரா வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் தம் பால் 45, ரஜத் தேவ் 38, மணி சங்கர் சிங் 37 ரன் எடுத்தனர். இறுதியில் திரிபுரா, 20 ஓவர் முடிவில் 191 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
The post சையத் முஸ்டாக் அலி டி20 தமிழ்நாடு அணி அபார வெற்றி appeared first on Dinakaran.