- 21 மாடி டைடல் பார்க்
- சென்னை பட்டாபிராம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- டைடல் பார்க்
- பட்டாபிராம், திருவள்ளூர் மாவட்டம்
- பட்டபிரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை பட்டாபிராம்
- 21 மாடி டைடல் பார்க்
- தின மலர்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியை சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கினை எய்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அயல்நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். கடந்த 2000ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சியை பெற வித்திட்டது.
இதன் தொடர்ச்சியாக ‘பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி’ என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கேற்ப, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின்படி பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பட்டாபிராமில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியை சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும். பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, 2 நிறுவனங்களுக்கு டைடல் பூங்காவில் தள ஒதுக்கீட்டிற்கான ஆணைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எஸ்.எம்.நாசர், டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், அ.கிருஷ்ணசாமி, கே.கணபதி, ஜோசப் சாமுவேல், மாதவரம் எஸ்.சுதர்சனம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ், திருவள்ளூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருமழிசை பேரூராட்சி தலைவர் ஜெ.மகாதேவன், மாவட்ட துணை அமைப்பாளர் துர்காபிரசாத், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இ.மணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* திமுக ஆட்சியில்தான் டைடல் பார்க் புரட்சி….
தகவல் தொழில்நுட்ப துறையில் இந்திய அளவில் தமிழ்நாடு அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. குறிப்பாக, டைடல் பார்க் தொடங்கப்பட்டு ஐடி துறையில் முன்னோடி நகரங்களுக்கு சவால் விடும் அளவிற்கு சென்னை வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது, பெருநகரங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் சிறிய டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருவதன் முக்கிய காரணம், 2000ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது, மத்திய வர்த்தகத்துறை அமைச்சராக முரசொலி மாறன் இருந்தார். அப்போதுதான் முதல் முறையாக தமிழகத்தில் டைடல் பார்க் தொடங்கப்பட்டது. அதன்படி, முதல் டைடல் பூங்கா சென்னையின் தரமணி பகுதியில் அமைந்த தகவல் தொழில்நுட்ப கட்டிடம் ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களில் ஒன்றாகும்.
அதைத்தொடர்ந்து 2வதாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் டைடல் பார்க் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழகத்திலேயே மிகப்பெரிய 3வது டைடல்பார்க் தற்போது தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் நகரங்களில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் மினி டைடல் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டு, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 3 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், தமிழகத்தில் டைடல் பார்க் புரட்சி என்றாலே அது திமுக ஆட்சியில்தான் என்ற சாதனை தொடர்ந்து படைக்கப்பட்டு வருகிறது.
The post சென்னை பட்டாபிராமில் ரூ.300 கோடியில் 21 மாடி டைடல் பார்க்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.