* ரூ2,100 கோடி லஞ்சம் பெற்ற இந்திய அரசு அதிகாரிகள் யார்?
* சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
* நாடாளுமன்றம் கூடும் நிலையில் மவுனம் காக்கும் மோடி அரசு
* அமெரிக்காவின் ‘கிராண்ட் ஜூரி’ அடுத்து என்ன செய்யப் போகிறது?
புதுடெல்லி: நியூயார்க் கோர்ட் அதானிக்கு எதிராக ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்ததால் இந்திய பங்குச்சந்தையில் ரூ5.35 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அதானியிடம் இருந்து ₹2,100 கோடி லஞ்சம் பெற்ற இந்திய அரசு அதிகாரிகள் யார்? என்பதும், இவ்விசயத்தை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. நாடாளுமன்றம் கூடும் நிலையில் மோடி அரசு மவுனம் காப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதானி குழும நிறுவனங்களின் தலைவரான கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார். கடந்த சில ஆண்டுக்கு முன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் முறைகேட்டில் அதானி குழுமங்கள் ஈடுபட்டதாக கூறி ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது. உச்ச நீதிமன்றம் வரை சென்ற இவ்விவகாரம், இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதானி குழுமம் – பிரதமர் மோடி இடையிலான உறவு குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவ்வப்போது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி (அதானி கிரீன் எனர்ஜி செயல் இயக்குநர்), முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2020-24ம் காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில், ‘அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முறைகேடான ஒப்பந்தங்கள் மூலம் 20 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான லாபத்தை ஈட்ட முடியும். இந்த விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை கவுதம் அதானி பல முறை சந்தித்துள்ளார். லஞ்சத்தை மறைத்து அதானி நிறுவனம் 300 கோடி டாலருக்கு (ரூ.25,000 கோடி) அமெரிக்காவில் முதலீடு பெற்றது.
அமெரிக்க கடன் பத்திர சட்ட விதிகளை மீறி செயல்பட்டதற்காக, அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியம் டெல்லியை சேர்ந்த அஸுர் பவர் நிறுவனம், அதானி குழுமத்தின் கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இது, சர்வதேச சட்ட அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘கவுதம் அதானியை பிரதமர் மோடி பாதுகாத்து வருகிறார். கவுதம் அதானி உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற கூட்டத் ெதாடர் வரும் 25ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளதால், அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அமெரிக்க நீதித்துறை இதுபோன்ற வழக்குகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இதுபோன்ற குற்றச் செயல்களை விசாரித்த பிறகு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய ஆதாரங்களை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பார்கள். கடுமையான குற்றம் நடந்திருப்பதாக அரசு வழக்கறிஞர் நம்பினால், பெரும் நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைப்பார்.
பெரும் நடுவர் மன்றம் (ஜூரி) என்பது பாரபட்சமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவாகும். நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த 23 ஜூரிகள் இருக்கலாம்; சாட்சியங்களிடம் விசாரணை நடத்த 16 ஜூரிகள் உள்ளனர். பெரும் நடுவர் மன்றத்தின் நோக்கம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றவாளியா அல்லது அவர் செய்தது குற்றமா? என்பதை தீர்மானிப்பது அல்ல. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா?, பொய்யா?, என்ன ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதை மட்டுமே விசாரிக்கும். அதன்படி பெரும் நடுவர் மன்றம் போதுமான ஆதாரங்களைக் கண்டால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குத் தொடரும்படி பரிந்துரை செய்யலாம். ‘கிராண்ட் ஜூரி’ என்று கூறப்படும் பெரும் நடுவர் மன்றத்தின் நடவடிக்கைகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன. அதேநேரம் விசாரணை நடவடிக்கைகள் பொதுமக்கள் பார்க்கும்படி இருக்கும்.
அதானி குழும வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு வழக்கு தொடரப்படும். நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வர். இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவருடைய கருத்தும் கேட்கப்படும். இதுபோன்ற சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் தான் அதானி கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பதை அமெரிக்க நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். அதேநேரம் இந்திய சட்டங்களின்படி இந்திய அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி உள்ளிட்டோர் ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதால் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற இந்திய புலனாய்வு அமைப்புகள் தானாக முன்வந்து வழக்குபதிந்து விசாரணை நடத்த முடியும். அதன்படி பார்த்தால் ராகுல்காந்தி கூறியது போல் கவுதம் அதானி உள்ளிட்டோரை இந்திய சட்டத்தின்படியே கைது செய்து விசாரிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்போது தான் அதானியிடம் இருந்து லஞ்சம் பெற்ற இந்திய அதிகாரிகள் யார்? யார்? என்பதும் அம்பலமாகும். அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தில் இந்தியாவில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ₹2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதானி குழுமம் மட்டுமின்றி, அதானி குழுமத்தில் முதலீடு செய்ய எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி பல பெரும் நிறுவனங்களின் பங்குச்சந்தையும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதானி கைது பிடிவாரன்ட் செய்தி வெளியானது முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தையில் ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த தொகையானது ஒன்றிய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமமாகும். அதானி பங்கு வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையானது ஒவ்வொரு நிமிடமும் ரூ.1,115 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இதுபோன்ற வீழ்ச்சியை இந்திய பங்குச் சந்தை இதுவரை சந்தித்ததில்லை என்கின்றனர். இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியை தொடர்ந்து, அதானி குழும நிறுவனங்கள் மட்டும் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளன. பிடிவாரன்ட் செய்திக்கு முன் பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக உள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 17வது இடத்தில் இருந்து 25வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானியிடம் இருந்து ₹2,100 கோடி லஞ்சம் பெற்ற இந்திய அரசு அதிகாரிகள் யார்? இவ்விகாரத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்காவின் ‘கிராண்ட் ஜூரி’ அடுத்து என்ன செய்யப் போகிறது? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடும் நிலையில் மோடி அரசு அதானி விவகாரத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது போன்ற அரசியல் பரபரப்புகளால் அதானி விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 17வது இடத்தில் இருந்தார். தற்போது அவர் 25வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
எந்த பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது?
அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்இசி) அதானி குழுமம், டெல்லியை சேர்ந்த அஸுர் பவர் நிறுவனம் ஆகியவற்றின் மீது நான்கு முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதாவது, அமெரிக்க பத்திரங்கள் சட்டத்தின் மீறல் பிரிவு 17(ஏ), பரிவர்த்தனை சட்டம் பிரிவு 10(பி) மற்றும் விதி 10பி-5 ஆகியவை மீறல்கள் நடந்துள்ளன. கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிராக 1933ன் செக்யூரிட்டீஸ் சட்டம் பிரிவு 17(ஏ) மற்றும் 1934ன் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் சட்டம் பிரிவு 10(பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, விதி 10பி-5ஐயும் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இதே போன்ற செயல்களைச் செய்யலாம் என்று எஸ்இசி எச்சரித்துள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்கண்ட இரு நிறுவனங்களும் முதலீடு செய்வதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். இரு நிறுவனங்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இது தொடர்பாக ஜூரி விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்இசி கோரியுள்ளது.
அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரி பதில்
அதானி விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியர் கூறுகையில், ‘அதானி மீதான குற்றச்சாட்டுகள் எங்களுக்கும் தெரியும். அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித் துறை ஆகியவற்றின் முடிவை எதிர்நோக்கி உள்ளோம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வலுவானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவான அடித்தளத்தை கொண்டவை. மற்ற பிரச்னைகளை கையாள்வதை போலவே இந்த சிக்கலையும் கையாள்வோம்’ என்றார்.
ஆந்திர மூத்த அதிகாரிக்கு ரூ1,750 கோடி லஞ்சம்
அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 54 பக்க குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதுபடி, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவருக்கு அதானி குழுமம் சுமார் ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்துள்ளது. அதாவது அதானி கொடுத்த மொத்த லஞ்சத் தொகையில் 85%க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி மவுனம் சாதித்து வருகிறது. இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.பட்டாபிராம் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு குறித்து ஓரிரு நாளில் கருத்து தெரிவிக்கிறோம்’ என்றார். அதே சமயம், ‘இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதிக்க முடியாது’ என்று அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் நாயுடு கூறினார்.
மேற்கண்ட விவகாரம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தான் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தம் பெற அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இவ்விசயத்தில் சந்திரபாபு நாயுடு அரசு மவுனமாகி உள்ளது. இதற்கு காரணம், ஆந்திராவில் முதலீடு ஈர்ப்பது தொடர்பாக அதானி குழுமத்துடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதனால் அதானி குழும விவகாரம் ஆந்திராவில் புயலை கிளப்பி உள்ளது.
கென்யா மட்டுமல்ல… வங்கதேசம், இலங்கையிலும்…
அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, அதானி குழுமத்துடனான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில், உள்கட்டமைப்புக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யா மட்டுமின்றி அதானி குழுமம் முதலீடு செய்துள்ள பல நாடுகள் தற்போது உஷாராகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசமும், இலங்கையும் அதானி குழும ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து வருகின்றன. அதானி குழுமத்திடம் வங்கதேசம் மின் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால் அதற்கான கட்டணத்தை வங்கதேசம் அரசு அதானிக்கு முறையாக செலுத்தவில்லை. அதனால் மின் விநியோகத்திற்கு தடை விதிப்பதாக சமீபத்தில் அதானி நிறுவனம் அறிவித்தது. அதனால் வங்கதேச இடைக்கால அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதானி குழுமத்துடனான 1,600 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்த டாக்கா உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அதானி லஞ்ச விவகாரம் வங்கதேசத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இலங்கையில் லங்கன் ஏர்லைன்ஸ் சார்பில், அதானியின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் இலங்கை அரசில் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.
எந்தெந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தது?
இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் 2020-24ம் ஆண்டு காலகட்டத்தில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடந்தது. ஜம்மு – காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் இருந்தது. லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகளை கவுதம் அதானியே நேரில் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பானது ஆந்திராவில் மூன்று முறை நடந்துள்ளது.
அதானி குழுமம் மறுப்பு
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘சோலார் பவர் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை, பங்குச் சந்தை கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை முற்றிலுமாக மறுக்கிறோம். குற்றம் நிரூபிக்கப்படும் வரை, பிரதிவாதிகள் நிரபராதிகளாகவே கருதப்படுவார்கள். நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள்’ என்று தெரிவித்துள்ளது.
The post நியூயார்க் கோர்ட் அதானிக்கு எதிராக ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்ததால் இந்திய பங்குச்சந்தையில் ரூ5.35 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.