×
Saravana Stores

அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க வழக்கறிஞர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானியும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட மொத்தம் 8 பேர் சேர்ந்து இந்திய அதிகாரிகள் 265 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்து சோலார் மின் திட்டங்களை பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து அதானி நிறுவனம் பிரச்னையை திசை திரும்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிற வேளையில், அதானி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்துள்ளது. கவுதம் அதானியும், சாகர் அதானியும் அமெரிக்காவில் பங்கு சந்தையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தனது 16 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்ட கவுதம் அதானி இன்றைக்கு இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற தகுதியை பிரதமர் மோடியின் ஆதரவினால் அடைந்திருக்கிறார்.

இதுகுறித்து அதானி மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக்குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். தம்மை மனிதப் புனிதராக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது நெருக்கமானவர்களுக்கு சலுகை வழங்குவதில் மோடி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். அதானி குழும நிறுவனத்திற்காக இந்தியாவில் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்திற்கு பதில், இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி ஆட்சி ஒரு மக்கள் விரோத ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post அதானி ஊழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Adani ,Chennai ,Tamil ,Nadu ,Congress ,President ,Selvaperunthakai ,American Bar Association ,Sagar Adani ,
× RELATED பிப்ரவரி 15 முதல் தொடங்குகின்றன...