×
Saravana Stores

பைக் மோதி சிறுவன் காயம்: மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, மீஞ்சூர்-காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக அங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள், நோயாளிகள் செல்லும் ஆம்புலன்ஸ் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், காட்டூர் பகுதியில் வசிக்கும் கவுரி என்ற பெண், தனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக அரியன்வாயல் பகுதியில் சாலையை கடந்தபோது, எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்து சிறுவன் மீது மோதியது.

இதில், காயமடைந்த சிறுவன் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர், மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, ரயில்வே மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு, மேம்பால பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பைக் மோதி சிறுவன் காயம்: மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Meenjoor-Katur road ,Meenjoor railway ,Tiruvallur district ,Mantakathi ,
× RELATED மேம்பாலப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு