ஊத்துக்கோட்டை: பூனை பிடிப்பது போல் சென்று வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் கொள்ளையடித்த பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை அருகே, நந்திமங்கலம், ராஜபாளையம், ஸ்ரீராமகுப்பம் மற்றும் வெங்கல் ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சினிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அவரது உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்ஐ நாகராஜ் மற்றும் குற்றப்பிரிவு எஸ்ஐ.க்கள் ராவ்பகதூர், செல்வராஜ் மற்றும் ஏட்டு ராஜன், மந்திரசேகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில், தனிப்படை போலீசார் திருட்டு நடந்த இடங்களில் இருந்து ஆந்திர மாநில எல்லை பகுதிகள் வரை சுமார் 70 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், ஒரு பெண் உட்பட 3 நபர்கள் திருட்டு நடந்த வீடுகளில் இருந்து வெளியே செல்வது தெரிந்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சீத்தஞ்சேரி பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கும்மிடிப்பூண்டி கோங்கல்மேடு கிராமம் எஸ்டி காலணியை சேர்ந்த கிருஷ்ணன்(26), திருப்பதி மண்டலம் காளஹஸ்திரி ராஜிவ் நகரை சேர்ந்த சத்யராஜ்(35), இவரது மனைவி பிரமிளா(30), கும்மிடிபூண்டி சித்திரையசை கண்டிகை டி.ஏ. நகரை சேர்ந்த அஜித்(21) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கூறியதாவது: நாங்கள் பூனைகளை பிடிப்பது போல் சென்று வீடுகளை நோட்டமிடுவோம். பின்னர் பகல் நேரத்தில் ஆட்கள் இல்லாத வீடுகளுக்கு வந்து நகை, பணத்தை திருடி செல்வோம். அந்த பணத்தை வைத்து வசதியாக வாழலாம் என நினைத்தோம். ஆனால் மாட்டிக்கொண்டோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து, பெண் உட்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 சவரன் நகை மற்றும் 700 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் 4 பேரையும் ஊத்துக்கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
The post பூனை பிடிப்பது போல் நோட்டம் வீடுகளில் நகை, பணம் திருடிய பெண் உட்பட 4 பேர் கைது: சிக்க வைத்தது சிசிடிவி appeared first on Dinakaran.