×

சபரிமலைக்கு வரும் பஸ்கள் உள்பட வாகனங்களில் எல்இடி அலங்கார விளக்குகளை பொருத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பஸ்கள் உள்பட, வாகனங்களில் எல்இடி அலங்கார விளக்குகளை பொருத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குழுக்களாக வரும் பெரும்பாலான பக்தர்கள் பஸ்கள், வேன்கள் உள்பட வாகனங்களில் வருகின்றனர். சிலர் இந்த வாகனங்களில் கண்களை கூசவைக்கும் எல்இடி அலங்கார விளக்குகளை பயன்படுத்துகின்றனர்.

இது சில சமயங்களில் விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் எருமேலியில் நாமக்கல் பக்தர்களின் மினி பஸ் கவிழ்ந்தது. இந்த பஸ்சில் எல்இடி அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், சபரிமலைக்கு வரும் பஸ்கள் உள்பட வாகனங்களில் எல்இடி அலங்கார விளக்குகளை பொருத்த தடை விதித்து உத்தரவிட்டது. சிறுவர், சிறுமிகள் கைகளில் பேண்ட் : சபரிமலைக்கு ஏராளமான சிறுவர், சிறுமிகளும் தரிசனத்திற்கு வருகின்றனர்.

சில சமயங்களில் இவர்கள் கூட்டத்தில் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.இதை தடுக்க தரிசனத்திற்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கைகளில் பேண்ட் அணிவிக்கப்படுகிறது. அதில் அவர்களது பெயர் மற்றும் உடன் வந்திருப்பவரின் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்கும். கூட்டத்தில் காணாமல் போனால் இந்த விவரங்களை வைத்து உடனடியாக அவர்களை கண்டுபிடிக்க முடியும். வயதானவர்களின் கைகளிலும் இந்த பேண்ட் அணிவிக்கப்படுகிறது. பம்பையில் இருந்து செல்லும் போது கைகளில் இது அணிவிக்கப்படும்.

The post சபரிமலைக்கு வரும் பஸ்கள் உள்பட வாகனங்களில் எல்இடி அலங்கார விளக்குகளை பொருத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Kerala High Court ,Thiruvananthapuram ,Mandal Pujas ,Sabarimala Ayyappan Temple ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,Karnataka ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவு:...