×
Saravana Stores

கோயம்பேடு மார்க்கெட்டில் 7 முதல் 14ம் நம்பர் கேட் மூடல்: நள்ளிரவில் வியாபாரிகள் போராட்டம்


அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் முக்கிய கேட்டுகளான 7 முதல் 14ம் எண் வரையுள்ள கேட்டுகள் மதியம் 2 மணி அளவில் பூட்டி இரவு 9 மணி அளவில் மீண்டும் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணிவரை கோயம்பேடு வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி மாநிலங்களில் இருந்துவரும் காய்கறிகள், பழம் பூக்கள் வாகனங்கள் மார்க்கெட்டில் உள்ளே வர முடியாமல் வெளியே வரிசையாக நிறுத்தப்பட்டதால் மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, சிஎம்டிஏ செயற்பொறியாளர் ராஜன்பாபு உள்பட அதிகாரிகள் வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள், ‘கோயம்பேடு மார்க்கெட்டை மதியம் 2 மணிக்கு பூட்டி வைத்து இரவு 9 மணிக்கு மீண்டும் கேட்டுகள் திறக்கப்படுவதால் வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வாகனங்கள் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் வருவதற்கு 24 மணி நேரமும் கேட்டுகள் திறக்கவேண்டும்’ என்றனர். அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கூறுகையில், ‘’காய்கறி, பழம், பூ ஆகிய மார்க்கெட்டை சுத்தம் செய்வதற்கு மதியம் கேட்டை பூட்டி வைத்து மீண்டும் இரவு கேட்டுகளை திறந்து விடுகிறோம்.

கோயம்பேடு மார்க்கெட்டின் அனைத்து கேட்டுகளையும் 24 மணி நேரமும் திறந்துவைத்தால் மார்க்கெட்டை எப்போழுது சுத்தம் செய்வது’ என்றார். இதையடுத்து எந்த நேரத்தில் கேட்டை திறக்கவேண்டும் என்று வியாபாரிகள் கடிதம் எழுதிகொடுத்துவிட்டு போராட்டத்தை கைவிட்டனர். இதன்பிறகு மீண்டும் மார்க்கெட் வளாகத்திற்குள் காய்கறி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ‘’7 முதல் 14ம் நம்பர் கேட்டுகளை அங்காடி நிர்வாகம் பூட்டியுள்ளது. இந்த கேட்டுகள்தான் பெரிய கடைகளுக்கு காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் வரக்கூடிய முக்கிய வழித்தடம். இதனை அடைத்ததால் மொத்த கோயம்பேடு நிர்வாகமும் முடங்கியுள்ளது.

எந்தவித அறிவிப்போ அல்லது நோட்டீசோ அங்காடி நிர்வாகம் தரப்பில் இருந்து தரப்படவில்லை. ஏற்கனவே ஒருமுறை இதுபோன்று கேட்டுகளை அடைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் கேட்டுகளை திறக்கவைத்தோம். அப்போது வாய்மொழியாக அங்காடி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அந்த வாக்குறுதியை தற்போது மீறியுள்ளனர். எனவே, இந்தமுறை எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியை அளிக்க வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும்’ என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் 7 முதல் 14ம் நம்பர் கேட் மூடல்: நள்ளிரவில் வியாபாரிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : number ,Koyambedu market ,Annanagar ,Chennai ,Gate No. 7 ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு