×
Saravana Stores

மழைக்காலங்களில் வாகனங்கள் சிக்குவதை தடுக்க சுரங்கப்பாதைகளில் தானியங்கி தடுப்பு: டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னையில் மழை காலங்களில் அதிகப்படியான மழை பொழிவு இருக்கும் நேரங்களில் தாழ்வான பகுதிகள், சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கும். மழை பெய்யும் போது சாலைகளில் தேங்கும் மழைநீர் வடிகால் வழியாக அகற்றப்படுகிறது. சில இடங்களில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டு நீர் செல்ல முடியாத நேரங்களில் மழை நின்ற பின் மாநகராட்சி பணியாளர்கள் அதை சரி செய்து நீரை அகற்றுகின்றனர். அதேபோல், தாழ்வான பகுதிகள் மற்றும் சுங்கப்பாதைகளில் தேங்கும் நீரை மோட்டர்கள் உதவியுடன் அகற்றுகின்றனர். மழைக்காலங்களில் சாலைகளை காட்டிலும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்குவதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சில நேரங்களில் ஆழம் தெரியாமல் நீரில் சிக்கிக்கொள்கின்றன. குறிப்பாக, மாநகர பேருந்துகள் அவ்வப்போது இதுபோல் சுரங்கப்பாதை நீரில் சிக்கி, பழுதாகி நிற்பது வழக்கம். உடனடியாக அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு, பின்னர் தண்ணீர் வடிந்ததும், அந்த பேருந்து மீட்கப்படும். சில நேரங்களில் கார், பைக், வேன் போன்ற வாகனங்களும் இவ்வாறு சுரங்கப்பாதையில் தேங்கும் நீரில் சிக்கி, பழுதாகி நிற்கின்றன.
மேலும், மழைநீர் வடியும் வரை, அந்த சுரங்கப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, மழைக்காலங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, சென்னையில் 12 ஒற்றை வழிப்பாதை மற்றும் 5 இரட்டை பாதை சுரங்கப்பாதைகளில் தானியங்கி சாலை தடுப்புகளை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, அதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், இந்த திட்டதை மழைநீர் வடிகால் துறை மேற்கொள்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 22 சுரங்கப்பாதைகள் உள்ளன, அவற்றில், 17 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கும் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் அளவு உயரும்போது, தானாக கண்டறிய சுரங்கப்பாதை அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மழைநீர் ஒரு குறிப்பிட்ட வரம்பை அடையும் போது, அந்த சுரங்கப்பாதை வழியே வாகன போக்குவரத்தை தடுக்க தானியங்கி தடுப்பை ஏற்படுத்தும்.

செயற்கை நுண்ணறிவுடன், நீர் நிலைகளை நிகழ்நேர கண்காணிப்புக்கு இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இது மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்த அனுமதிக்கிறது. வெள்ள நீர் வடிந்தவுடன் தடைகள் தானாக அகற்றப்படும். சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலி, அவசரநிலைகளின் போது தடைகளை நேரடியாக அதிகாரிகள் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இந்த தடைகள் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பை செயல்படுத்தி, சுரங்கப்பாதைகளில் நிகழ்நேர வெள்ள நிலைமையை கண்காணிக்கும். இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டதால், தானியங்கி தடுப்பு அமைப்பு 15 நாட்களில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் செய்தி பலகைகள், நீரில் அளவு குறித்த நிகழ்நேர தகவல் மற்றும் தமிழ், ஆங்கில குரல் அறிவிப்பு அமைப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த திட்டத்தில் அடங்கும். மோசமான வானிலையின் போது, பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சுரங்கப்பாதையின் நிலைமை குறித்து தெரியப்படுத்தவும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் சிக்கித் தவிக்கும் அபாயம் குறையும். இந்த திட்டத்திற்கு ரூ.63.60 லட்சம் முதல் ரூ.92.99 லட்சம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

The post மழைக்காலங்களில் வாகனங்கள் சிக்குவதை தடுக்க சுரங்கப்பாதைகளில் தானியங்கி தடுப்பு: டெண்டர் கோரியது மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தாய்லாந்தில் நடந்த தீவிபத்தில்...