இம்பால்: மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் மாநில முதல்வரின் கூட்டத்தை 18 எம்எல்ஏக்கள் புறக்கணித்த நிலையில், சமீபத்தில் ஆதரவை வாபஸ் பெற்ற கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் தலைதூக்கிய நிலையில், நேற்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 45 எம்எல்ஏக்களில் 27 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்காத 18 எம்எல்ஏக்களில் ஆறு பேர் தங்களது உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதேசமயம், ஒரு அமைச்சர் உட்பட 11 எம்எல்ஏக்கள் எவ்வித காரணம் கூறவில்லை. மொத்தமுள்ள 10 பழங்குடி எம்எல்ஏக்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து முதல்வர் பிரேன் சிங் வெளியிட்ட பதிவில், ‘ஜிரிபாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம்.
மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். முன்னதாக மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் கட்சி, மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து பிரேன் சிங் அரசு கவிழுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் உள்ளதால் ஆட்சிக்கு ஆபத்தான சூழல் ஏற்படவில்லை. கான்ராட் சங்மாவின் கட்சிக்கு ஏழு எம்எல்ஏக்கள் இருந்தும், அவர்களில் நான்கு எம்எல்ஏக்கள் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஏழு அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஜிரிபாமில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகளை ஏழு நாட்களுக்குள் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும். மூன்று முக்கிய வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு எடுத்து கொண்டதை வரவேற்கிறோம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
The post வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் மணிப்பூர் முதல்வரின் கூட்டத்தை புறக்கணித்த 18 எம்எல்ஏக்கள்: ஆதரவு வாபஸ் பெற்ற கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.