×
Saravana Stores

கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை 108 முறை வலம் வந்து வழிபட்ட பக்தர்கள்

சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் கார்த்திகை முதல் திங்கள் கிழமை சோமவாரம் சேர்ந்து வரும் இந்த நாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாகும். இதனால் நேற்று அதிகாலை முதல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட குடும்பத்தினருடன் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.

குறிப்பாக பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற வலியுறுத்தி கொடிமரத்துடன் சேர்ந்த சித்சபையை 108 முறை வலம் வந்தனர். ஒரு சிலர் 9,11, 21,54, என்ற எண்ணிக்கை முறையிலும் வலம் வந்தனர். இதில் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள், வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

அதேபோல் வேண்டுதல் நிறைவேற்ற நடராஜர் கோயிலுக்குள் இருக்கும் ஆதிமூலநாதர் சுவாமியை தரிசனம் செய்து அங்கும் வெளிப்பிரகாரத்தில் 108 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டனர். பின்னர் சிவகாம சுந்தரி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். அங்கு உள் பிரகாரம், வெளி பிரகாரத்திலும் வலம் வந்து அம்பாளை வழிபட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிகாலை முதல் அதிகளவு பக்தர்கள் வந்திருந்ததால், கீழ வீதி, மேலவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட நான்கு வீதிகளிலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதேபோல் கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம் மற்றும் சிவகங்கை தீர்த்த குளம், கீழ சன்னதி வழி உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அனந்தீஸ்வரர் கோயிலிலும் சோமவாரத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை 108 முறை வலம் வந்து வழிபட்ட பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja temple ,Karthikai month ,Chidambaram ,Nataraja Temple ,Kartika ,Lord Shiva ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை...