திருப்போரூர்:திருப்போரூர் அருகே கொட்டமேடு – எடர்குன்றம் இடையே கிராம சாலை பழுதடைந்து பள்ளம் படுகுழியுமாக மாறி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சியில் எடர்குன்றம் கிராமம் உள்ளது. திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் இந்த கிராமங்கள் உள்ளன.
இந்த இரு கிராமங்களிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கொட்டமேடு கிராமத்தில் இருந்து மயிலை வழியாக எடர்குன்றம் கிராமத்திற்கு 2 கிமீ தூர சாலை உள்ளது. இந்த சாலை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. எடர்குன்றம் கிராமமக்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்காகவும் கொட்டமேடு சந்திப்பு வந்து அங்கிருந்து திருப்போரூர், செங்கல்பட்டு, தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியநிலை உள்ளது.
மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்கள், பணி நிமித்தம் எடர்குன்றம் கிராமத்தில் இருந்து வெளியே வரும் மக்கள் பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை நன்றாக போடப்பட்டுள்ள இச்சாலையானது சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் எடர்குன்றம் கிராமத்திற்கு நடந்தும் மோட்டார் ைசக்கிளிலும் செல்லும்பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த கிராமப்புறச் சாலையை சீரமைத்து தர வேண்டுமென்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் முன் வைக்கப்பட்டுள்ளது.
The post திருப்போரூர் அருகே கொட்டமேடு – எடர்குன்றம் இடையே குளம்போல் காட்சியளிக்கும் கிராம சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.