×
Saravana Stores

அம்பத்தூர் மண்டல அலுவலகம் முற்றுகை

அம்பத்தூர்: தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அம்பத்தூர் மண்டல அலுவலகம் முற்றுகை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் முனையமாக அம்பத்தூரில் தொழிற்பேட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள, தாஸ் தொழிற்பேட்டையில், மகாத்மா காந்தி சாலை மற்றும் 24 தெருக்கள் உள்ளன. கனரக வாகன உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, சாலை மற்றும் தெருக்கள் அனைத்தும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வருகிறது. மழை காலங்களில், இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால், தொழிற்சாலைகள் செயல்பட முடியாத நிலைமை ஏற்படுகிறது. இதனால் பல கோடி வருவாய் தொழிறசாலைகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளதால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, போதிய வெளிச்சமின்றி விபத்துகளும் ஏற்படுகிறது.

புதிதாக தார் சாலை, மின் கம்பங்கள் அமைக்க கலெக்டர், தாசில்தார், சென்னை மாநகராட்சி உட்பட பலதுறைக்கு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தாஸ் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று அம்பத்தூர் 7 மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் போலீசாரும், மண்டல அதிகாரிகளும், தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் தாஸ் தொழிற்பேட்டை சங்கத் தலைவர் முருகதாஸ் கூறுகையில், அதிகாரிகள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளனர். மின்கம்பங்கள் உடனடியாகவும், சாலை அமைப்பதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் கால அவகாசம் எங்களிடம் கேட்டுள்ளனர் என்றார்.

The post அம்பத்தூர் மண்டல அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Asia ,Das Industrial Estate ,Mahatma Gandhi Road ,streets ,Dinakaran ,
× RELATED அம்பத்தூரில் உள்ள ஆனந்தபவன் சமையலறையில் தீ விபத்து