×
Saravana Stores

கோரத்தாண்டவமாடிய ‘கஜா புயல்’; ஆறாண்டு நிறைவு; ஆறாத வடு

கடந்த 2018 நவம்பரில் கஜா புயல் வங்க கடலோரம் வழியாக தஞ்சை மாவட்டத்திற்குள் நுழைந்து பட்டுக்கோட்டையை மையமாக கொண்டு வீச தொடங்கியது. 15ம் தேதி மாலை தொடங்கிய கஜா புயலின் சீற்றம் 16ம் தேதி அதிகாலை வரை நீடித்தது. இதில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பல மனித உயிர்கள் பறிபோனது‌. வீடுகள் இடிந்து விழுந்தன. கால்நடைகளும் பலியாகின. மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தாலும், அதிக பாதிப்பை தென்னைக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதை கண்டு தென்னை விவசாயிகள் நிலைகுலைந்து போயினர். பல ஆண்டு உழைப்பு ஒரே நாள் இரவில் அடியோடு சாய்ந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர்.

அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவித்தார். ஒரு மரத்திற்கு ரூ.500 இழப்பீடாகவும், அவற்றை அகற்ற ரூ.600 செலவு தொகையாகவும் வழங்க உத்தரவிட்டார். ஆனால் ஒவ்வொரு மரமாக கணக்கிடாமல் ஒட்டுமொத்த பரப்பை கணக்கிட்டு அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால் முழுமையான இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதன்மூலம் தென்னை மரம் கொண்டு வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள் கடந்த 6 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றனர்.

இது குறித்து வெண்டாக்கோட்டை விவசாயிகள் சங்க தலைவர் வீரசேனன் கூறும் போது, கஜா புயல் வீசி 6 ஆண்டுகள் முடிந்து விட்டது. மீனவர்கள் படகுகள், வலைகள் வாங்கி தொழிலுக்கு சென்று விட்டனர். வீடுகளை இழந்தவர்கள் வீடுகளை புதுப்பித்து மீண்டும் கட்டி எழுப்பி விட்டனர். ஆனால் தென்னையை இழந்தவர்கள் உடனடியாக தென்னையை விதைத்து காய்ப்புக்கு கொண்டு வர முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றனர். இழப்பீடும் முழுமையாக கிடைக்கவில்லை. ஒரு ஹெக்டேருக்கு 175 மரம் என கொச்சின் தென்னை வாரியம் வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இழப்பீடு அறிவிக்கப்பட்டது. எனது 640 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது. ஆனால் 400 மரத்திற்கு தான் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால் முழுமையாக விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. மேலும் முழுமையாக சாய்ந்த தென்னை மரங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தென்னை மரத்தின் உச்சி குருத்து பாதிக்கப்பட்ட மரங்கள் கணக்கிடப்படவில்லை.

புதிய தென்னங்கன்று அறிவித்தார்கள். அது அனைவருக்கும் கிடைக்கவில்லை. ஊடுபயிராக உளுந்து விதை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த விதையும் தரமானதாக இல்லை. எனவே தற்போது தமிழக அரசு நெட்டை, குட்டை தென்னை ரகங்களை பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விலையில்லாமல் வழங்க வேண்டும். இன கவர்ச்சி பொறி முழு மானியத்தில் வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேவையான புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.

The post கோரத்தாண்டவமாடிய ‘கஜா புயல்’; ஆறாண்டு நிறைவு; ஆறாத வடு appeared first on Dinakaran.

Tags : Gaja ,Gaja Storm ,Tanji ,Bengal ,Patukkotta ,Patukkottai ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு...