தாம்பரம்: தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு மேல் காலதாமதமாக இயக்கப்படுவதை உடனடியாக சரி செய்ய வேண்டும். வேளச்சேரி – கடற்கரை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அரசு ஊழியர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பிரபா ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதம்:
தலைமை செயலகம், சேப்பாக்கம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களில் 80 சதவீதம் பணியாளர்கள் தெற்கு ரெயில்வேயின் புறநகர் ரயில் சேவையினை மட்டுமே பயன்படுத்தி, அலுவலகம் வந்து செல்கின்றனர். சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரையிலான மூன்று வழித்தட ரயில் பாதையானது நான்கு வழித்தட பாதையாக மாற்றப்பட்டு, 2 வாரங்களுக்கு முன்தான் கடற்கரைக்கும் – வேளச்சேரிக்கும் இடையே பறக்கும் ரயில் புறநகர் சேவையானது மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் பயணத்திற்கு பயண நேரம் 55 நிமிடங்கள் ஆகும். தற்போது, சென்னை எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரையிலான நான்காம் வழித்தட ரயில் போக்குவரத்து பாதை அமைக்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், தாம்பரம் – கடற்கரை வழித்தடத்தில், அதுவும் குறிப்பாக காலை அலுவலக நேரத்தில் சேத்துப்பட்டு முதல் கோட்டை வரையிலான பயண நேரமானது 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. அதிலும், தற்போது சென்னை பூங்கா, கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் புறநகர் துரித வண்டிகள் நின்று செல்லும் நடைமேடையானது அகற்றப்பட்டு விட்டதால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை நோக்கி இயக்கப்படும் புறநகர் துரித வண்டிகள், சாதாரண புறநகர் ரயில் தடத்தில் இயக்கப்பட்டு, சேத்துப்பட்டு முதல் கோட்டை வரை இயல்பாக 9 நிமிடங்களில் இயக்கப்பட வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் மிகவும் தாமதமாக, 30 நிமிடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் காலை நேரங்களில் தலைமை செயலகம், சேப்பாக்கம், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்களது அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
தெற்கு ரயில்வே சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரையிலான நான்காம் வழித்தட பணிகளை தொடங்குவதற்கு முன்பாக இதைப்போன்ற அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரியவருகிறது. கடந்த 2 மாதங்களாக இதுபோன்ற காலதாமதத்தினால் பயணிகள், அதிலும் குறிப்பாக அலுவலகம் செல்லும் பயணிகள் காலை வேளையில் கடுமையான இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் தெற்கு ரயில்வே உடனடியாக தலையிட்டு, காலதாமத்திற்கு காரணமான தொழில்நுட்ப சீர்கேடுகளை களைந்து, தாம்பரம் – கடற்கரை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையினை நடைமுறையில் உள்ள 55 நிமிடங்கள் என்ற இலக்கை எய்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வேளச்சேரி – கடற்கரை இடையே கூடுதல் ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
The post தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு மேல் காலதாமதமாக இயக்கப்படுவதை சரி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.