ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு மற்றும் நொகனூர் வனப்பகுதியில், மேலும் 30 யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள், கடந்த 12ம் தேதி இடம் பெயர்ந்தன. கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 15 நாட்களுக்கு முன், 50க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக பகுதியான தேவரபெட்டா வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்குள் நுழைந்தன.
பின்னர், இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கு பல குழுக்களாக பிரிந்தன. அந்த பகுதியில் ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் ஆகிய பயிர்களை சேதப்படுத்தின. இடம்பெயர்ந்த யானைகளை விரட்டுவதற்காக, 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த கும்பலில் 20 யானைகள் இரவோடு, இரவாக ராயக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து ராகி, தக்காளி, பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தின.
நேற்று முன்தினம் இரவு, ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு 10க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. இந்த யானைகள் சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப்பள்ளி வழியாக கொம்மேபள்ளிக்கு சென்றன. அங்குள்ள விவசாய நிலங்களில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி விட்டு, அதிகாலையில் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு சென்று விட்டன. இதனால் கால்நடைகளை மேய்க்க செல்பவர்கள், விறகு சேகரிக்க செல்பவர்கள் வனப்பகுதிக்கு தனியாக செல்லக்கூடாது. மேலும், தங்கள் பகுதியில் யானைகளை கண்டால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தர வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில், 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகானப்பள்ளி, ஏணிமுச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து ராகி, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை சேதப்படுத்தின. நேற்று காலை, மாரசந்திரம் கிராமம் அருகே ஒற்றை யானை சுற்றி திரிந்தது.
இதை பார்த்து அச்சமடைந்த கிராம மக்கள், பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். ஆனால், யானை அங்கேயே முகாமிட்டு, ராகி பயிர்களை நாசம் செய்தது. மாலையில் அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து, ஏணிமுச்சந்திரம் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் முகாமிட்டு, கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post சானமாவு, நொகனூர் பகுதியில் மேலும் 30 யானைகள் தஞ்சம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.